Monday, December 24, 2007

404. குஜராத்தில் மோடியின் மகத்தான வெற்றி

நான் எனது இப்பதிவில் எழுதியது போலவே, மோடி குஜராத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். ஆனால், ஆட்சியில் இருந்த ஒரு முதல்வர் anti-incubency-க்கு எதிராக இத்தகைய மகத்தான வெற்றியைப் (117/182) பெறுவார் என்று யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது! நான் இதை மோதித்துவாவுக்கு (இந்துத்வா + பொருளாதார முன்னேற்றம்) கிடைத்த வெற்றியாகவே பார்க்கிறேன்.

பிஜேபியில் இருந்து கொண்டே குழி பறித்த கேசுபாய் போன்றவர்கள் மூஞ்சியில் மோடி நன்றாக கரியைப் பூசி விட்டார். அது போலவே, ஊடகத்துறையில் உலவும் போலி அறிவுஜீவிகள் (மக்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு) அளித்த முன்முடிவுகள், கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றையும் மோடியின் மகத்தான வெற்றி பொய்யாக்கி விட்டது.

குஜராத் வன்முறையின்போது, மோடியின் அரசு வன்முறைக்கு துணை போனது மறுக்கமுடியாத ஒன்று என்றாலும், மோடி மாநிலத்தை திறமையாக நிர்வகித்து, முதலீடுகளை ஊக்குவித்து, பொருளாதார வளர்ச்சிக்கு அடி கோலியதின் மூலம், பெருவாரியான மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார் என்பதும் மறுக்க முடியாத ஒன்றே! மோடி வெற்றி பெற்றது, மக்கள் நலத் திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வழி வகுக்கும். ஏனெனில், வளர்ச்சிக்கு Contuinity மிக அவசியம்.

அது போலவே, பெரும்பாலும் ஊழலற்றதொரு நிர்வாகம் (நம் நாட்டில் இது மிகப்பெரிய விஷயம்!) ஏற்படவும் மோதி காரணமாக இருந்துள்ளார்! எவ்வித சார்பும் இல்லாத ரிசர்வ் வங்கியின் அறிக்கை ஒன்று, குஜராத்தின் 12% வளர்ச்சி மற்றும் அன்னிய முதலீடுகள் அதிகரிப்பு குறித்துப் பேசுவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் குஜராத்தில் ஆட்சி செய்தபோது தான், ஊழல் அங்கு மலிந்திருந்தது.

நான் கூட, இம்முறை காங்கிரசுக்கும், மோடிக்கும் சரியான போட்டி இருக்கும் என்றும், குறுகிய பெரும்பான்மையில் தான் மோடி ஆட்சிக்கு வரக்கூடியது சாத்தியம் என்றும் எண்ணினேன். மோடியை "மரணத்தின் வியாபாரி" என்று அழைத்த சோனியாவின் காங்கிரசுக்கு இப்படி ஒரு மரண அடி குஜராத் மக்கள் கொடுப்பார்கள் என்று நினைக்கவில்லை!

அதோடு, ராகுல் காந்தி, கட்சிக்கு புத்துயிரும், பலமும் தந்து விடுவார் என்ற எதிர்பார்ப்பு உடைந்ததும் நல்லதுக்குத் தான். பரம்பரை / வாரிசு அரசியல் காங்கிரஸில் ஒழிய வேண்டும், அப்போது தான் கட்சி உருப்படும்! காங்கிரஸின் அணுகுமுறையும், தேர்தல் யுக்திகளும் backfire ஆனது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஒருவரை எள்ளி நகையாடுவதற்கும், சிறுமைப்படுத்துவதற்கும் ஒரு அளவு வேண்டும் என்பதை சோனியாவும், இன்னும் சிலரும் புரிந்து கொண்டிருப்பார்கள்!

அடுத்த வருடத்திலேயே பாராளுமன்றத் தேர்தலை நடத்தலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சித் தலைமையின் எண்ணத்தை மோடியின் வெற்றி மாற்றி விட்டது. இனி, அணுசக்தி ஒப்பந்தம் பற்றிய பேச்சும் இருக்காது, 2008-இல் தேர்தல் என்ற பேச்சும் கிடையாது :) அது போலவே, அடுத்த தேர்தலில் ராகுலை பிரதம மந்திரி வேட்பாளாராக அறிவிப்பது குறித்தும், காங்கிரஸ் யோசிக்க வேண்டியுள்ளது! என்னளவில், ராகுல் காந்திக்கு பிரதமராக வருவதற்கு உள்ள தகுதியை விட மோடிக்கு குஜராத்தின் முதல்வராகத் தொடர்வதற்கு தகுதி இருப்பதாகவே எண்ணுகிறேன்.

அதே நேரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கவில்லை என்பதும் உண்மையே. நேற்று தொலைக்காட்சியில் அம்மக்களில் சிலர் சொன்னதின் சாரம் இது தான்: "நாங்கள் 2002-ஐ மறந்து, முன் நோக்கி வாழவே விரும்புகிறோம். எங்களுக்கு நியாயமும், உரிய நஷ்ட ஈடும் கிடைக்க வேண்டும்".

நரேந்திர மோடி, தான் ஒட்டு மொத்த குஜராத்தின் முதல்வர் என்பதை மறந்து விடாமல், அடுத்த 5 ஆண்டுகளில், எல்லாரையும் அரவணைத்து, குஜராத்தில் எல்லா தரப்பு மக்களும் அச்சமின்றி உரிமையோடு வாழவும், பொருளாதார வளர்ச்சியின் பலன் அனைவரையும் அடையவும் வழி வகுத்து, நல்லாட்சி வழங்குவாரேயானால், அவரது கடந்த கால கறைகள் (நடந்து முடிந்ததை யாரும் மாற்ற முடியாது!) மறைவதோடு, மோடியின் அரசியல் எதிர்காலமும் பிரகாசமாக அமையும் ! நம்புவோம் !!!

ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்!

எ.அ.பாலா

Saturday, December 15, 2007

399. மருத்துவர் ஐயா vs அமைச்சர் - பாகம் II

எதிர்பார்த்தது போலவே, திமுக பாமகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதில் தங்களுக்கு மகிழ்ச்சியே என்று டாக்டர் ஐயா கூறி விட்டார்! 'நாங்கள் திமுகவின் தோழமைக்கட்சி அல்ல, நட்புடன் கருத்து கூறும் எதிர்க்கட்சி மட்டுமே' என்று மருத்துவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆனால், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி (திமுக அதில் இருந்தாலும், இல்லாவிட்டாலும்) அமைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அது போலவே, நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்கு தங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றும், வந்திருந்தாலும் சென்றிருக்க மாட்டோம் என்று மேலும் கூறினார்.

அத்துடன், பத்திரிகையாளர் குழுவை திண்டிவனம் அருகில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான பல்கலைக்கழக வளாகத்திற்கு அழைத்துச் சென்று, ஆவணங்களையும் சாட்சிகளையும் காட்டி, ஆற்காட்டாரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்பதையும் சுட்டிக் காட்டினார். பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வரும் நிலம், விளைநிலமோ, பொறம்போக்கு நிலமோ அல்ல என்று உறுதிபடக் கூறினார்.

2011 சட்டசபைத் தேர்தலில் திமுக மற்றும் அஇஅதிமுக இல்லாத ஒரு கூட்டணிக்கு பாமக தலைமை வகிக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்தார் !!! OBC இடஒதுக்கீடு மற்றும் AIIMS பிரச்சினைகளில் திமுக தங்களுக்கு தேவையான ஆதரவு அளிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

கடலூரில் மின்நிலையத் திட்டத்திற்கு, ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவசர அவசரமாக அனுமதி வழங்கியது ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதில் கூறவில்லை என்பதையும், அமைச்சரின் உறவினர் ஒருவருக்கு அத்திட்டத்தில் பங்கு உள்ளது என்பதையும் அமைச்சர் இதுவரை மறுக்கவில்லை என்பதையும் ராமதாஸ் சுட்டிக் காட்டினார்.

இது இப்படி இருக்க, மருத்துவர் பல சமயங்களில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக ஆற்காட்டார் குற்றம் சாட்டியுள்ளார். வன்னியர் பல்கலைக்கழகம் குறித்து தான் வைத்த குற்றச்சாட்டின் பேரில் தன் மேல் வழக்கு தொடருமாறு அமைச்சர் மருத்துவர் ஐயாவுக்கு சவால் விடுத்துள்ளார். (முதலில், டாக்டர் ஐயாவின் சவால், இப்ப அமைச்சரின் சவால்! :))

சென்னைக்கு வெளியே, நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவில் பொறம்போக்கு நிலங்களை பாமகவினர் ஆக்ரமிப்பு செய்திருப்பதாகவும், அதனாலேயே திமுகவின் சாட்டிலைட் நகர் திட்டத்தை பாமக எதிர்த்து முடக்கியதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார். (இது நடந்து ஓராண்டு கழித்து, அமைச்சர் குற்றம் சாட்டுவது ஆச்சரியமாக உள்ளது !!!)

மேலும், ஒன்றரை கோடி வன்னிய மக்களுக்கு தான் ஒருவரே பிரதிநிதி போல ராமதாஸ் பேசுவது விந்தையாக உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தொடரும் .....

நன்றி: டெக்கான் குரோனிகள், இந்தியன் எக்ஸ்பிரஸ்

Friday, December 14, 2007

ராமதாஸ் VS ஆற்காட்டார் = ஐயோ ஐயோ ஐயோ!

இப்ப நடந்து கொண்டிருக்கும் ராமதாஸ்-ஆற்காட்டார் மோதல், தீப்பொறி நிலையிலிருந்து காட்டுத்தீ அளவுக்கு போய் விட்டது !!! எப்போதும் போல இதை தொடங்கி வைத்தவர் மருத்துவர் ஐயா தான். மின்சாரப் பற்றாக்குறையை முன் வைத்து தமிழக அரசையும், அமைச்சரையும் ராமதாஸ் ஒரு பிடி பிடித்ததோடு நில்லாமல், கடலூர் அருகில் உள்ள தியாகவல்லி மற்றும் குடிகாடு ஆகிய கிராமங்களில், மின் உற்பத்திக்காக தமிழக அரசு கையகப்படுத்தியுள்ள நிலம், விவசாய நிலம் என்றும் குற்றம் சாட்டினார்.

இதுவரை மருத்துவரை சகித்துக் கொண்ட திமுக, திருப்பித் தாக்க ஆற்காட்டாருக்கு அனுமதி கொடுத்திருக்கும் என்பது என் யூகம் :) அரசின் அனைத்து நலத் திட்டங்களுக்கும், ஏதாவது காரணம் காட்டி, ராமதாஸ் முட்டுக்கட்டை போடுவதாகவும், அவரின் போக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், திமுக மீது மக்களுக்கு வெறுப்பு வர வேண்டும் என்பதே மருத்துவரின் எண்ணம் என்றும், ஆனால் அவரது ஆசை நிறைவேறாது என்றும் மருத்துவர் ஐயாவை தைரியமாக ஒரு வாங்கு வாங்கி விட்டார் ! அவருக்கு பாராட்டுக்கள் ;-)

மேலும், ராமதாஸ் சொல்வது போல் அரசு கையகப்படுத்தியுள்ள நிலம், விளை நிலமே அல்ல என்றும், டாக்டர் ராமதாஸ் தமிழ்நாடு காட்டுமிராண்டி காலத்தை போல் மாற வேண்டும் என்று நினைக்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்!

அதோடு நில்லாமல், கொனேரிக்குப்பம் அருகில், வன்னியர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பா.ம.க வாங்கியிருக்கும் நிலங்களிலும், விளை நிலம் இருப்பதையும், பொறம்போக்கு நிலம் ஆக்ரமிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினார். திமுக தரப்பிலிருந்து இப்படிப்பட்ட பலத்த எதிர்ப்பை எதிர்பார்க்காத மருத்துவர், பொங்கியெழுந்து விட்டார். ஆற்காட்டார் (தான் கூறியதை) ஆதாரங்களோடு நிரூபித்தால், ராமதாஸ் தான் அரசியலை விட்டே நிரந்தரமாக விலகுவதாக ஒரு சவால் விட்டார் ! என்ன, தமிழ் சினிமா மாதிரி இருக்கா ? ;-)

தொடர்ந்து ஆற்காட்டாரும், சில ஆவணங்களில் உள்ள தகவல்களை முன் வைத்து, தான் எடுத்துரைத்த குற்றச்சாட்டை ஆதாரத்தோடு நிரூபித்து விட்டதாகவும், தேவைப்பட்டால், இன்னமும் ஏராளமான ஆதாரங்களை கொடுக்க தயாராக இருப்பதாகவும், சவால் குறித்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை டாக்டர் ராமதாசுக்கே விட்டு விடுவதாகவும் சற்று நீளமான பன்ச் டயலாக் ஒன்று விட்டார் !

மருத்துவர் சும்மா இருப்பாரா ? ஏழை எளிய நலிந்த வன்னிய மாணவர்களுக்காக, வன்னியர் கல்வி அறக்கட்டளையினால் தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தை, வன்னிய சமுதாயம் ஒரு கோயிலாகக் கருதுவதாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுவதை வைத்து தன்னை 'வளர்ச்சிக்கு எதிரி' என்று கருதினால் அது குறித்து தனக்குக் கவலையில்லை என்று (எதிர்பார்த்தது போலவே) மருத்துவர் பதில் முழக்கமிட்டார் !!! அதோடு, அமைச்சர் வீராசாமியின் வீண்பழி ஒன்றரை கோடி வன்னிய மக்களின் மனதை மேலும் புண்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை (ஒரு வழியா மெயின் மேட்டருக்கு வந்தாச்சில்லையா ;-))) என்று மனம் கலங்கினார் !

"தமிழகம் முழுவதும் ஏரி புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கூறு போட்டு விற்கப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து விற்கப்படுகின்றன. இப்படி ஏரி புறம்போக்கு நிலங்களை கூறு போட்டு விற்ற குபேரர்கள் யார் என்பது ஊருக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறிய ராமதாஸ், அவர்களை தக்க சமயத்தில் அம்பலப்படுத்தப் போவதாகவும் விடுத்த இறுதி எச்சரிக்கையோடு, இந்த மோதல், சாரி, யுத்தம் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது !

டாக்டர் ஐயா இன்னும் நிறையப் பேசினார், எனக்கு தட்டச்ச பொறுமையில்லை :)

"நாட்டு மக்களை ஏமாற்றுகிறவர்கள் யார்? உத்தமர்கள் போல் நடித்துக் கொண்டிருப்பவர்கள் யார்? என்பதை அப்போது மக்கள் அறியத்தான் போகிறார்கள்" என்று முத்தாய்ப்பாக மருத்துவர் கூறியது மிகச் சரியான கூற்றே !

எல்லாருக்கும் (மக்களுக்கு) எல்லாரைப் பற்றியும் எல்லாம் தெரியும் ! அதனால், ராமதாஸ் மற்றும் ஆற்காட்டார் அறிக்கைகளை/பேச்சை வைத்தெல்லாம் மக்கள் எந்த முடிவுக்கும் வரப்போவதில்லை என்பதும், இந்த மோதலில் இரு தரப்பினருமே அம்பலப்பட்டு நிற்கிறார்கள் என்பதும் நிதர்சனம் ;-)

எ.அ.பாலா

Sunday, December 09, 2007

Star26. அனைவருக்கும் 'நட்சத்திர' நன்றி + ஒரு வாக்கெடுப்பு

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

எனது நட்சத்திர வாரம் நிறைவடையும் தருணம் வந்து விட்டது ! என் இந்த வார இடுகைகளை வாசித்து பின்னூட்டம் இட்ட /இடாத அனைவருக்கும் நன்றி. வாசிக்காதவர்களும் பெரிதாக ஒன்றும் இழந்து விடவில்லை :)

என்னை நட்சத்திர வாரப் பதிவராக இருக்குமாறு அழைத்தபோது, நான் ஒரு 'பழைய' பதிவராக ஆகி விட்ட நிலையில், அழைப்பை ஒப்புக் கொள்ள ஒரு தயக்கம் இருந்ததென்னவோ நிஜம், புதிதாக தமிழில் வலை பதிய வந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு தரப்படுவது தான் சரியாக இருக்கும் என்று ஓர் எண்ணம் இருந்ததால்! ஆனால், தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகி என்னை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார். என் பணி நிலைமையை கருத்தில் கொண்டு, என் நட்சத்திர வாரத்தை சற்று தள்ளி வைக்கவும் ஒப்பிய அவருக்கு என் நன்றி!

எனது வலைப்பதிவு கவுண்டரின் இவ்வார ஓட்டம் திருப்திகரமாகவே இருந்தது :)
ப்ளாக் கவுண்டர் எண்ணிக்கை அதிகரிப்பு: 4970
அதாவது, இவ்வாரம் என் வலைப்பதிவு, ஒவ்வொரு மணி நேரத்திற்கும், கிட்டத்தட்ட 30 தடவை திறக்கப்பட்டுள்ளது! வாசகர்கள் மற்றும் தமிழ்மணம் தயவால் !

நட்சதிர வாரப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள்: 254
வாசகர்களுக்கு நன்றி. என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி.
இந்த நட்சத்திர வாரத்தில், சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு, 'கருத்து கூறுவார்கள்' என்று நான் எதிர்பார்த்த சில பதிவர்கள் வராமல் என்னை ஏமாற்றி (!) விட்டாலும், பல புதிய வாசகர்களை, இந்த நட்சத்திர வாரம் எனக்கு பெற்றுத் தந்துள்ளது!

பலதரப்பு வாசகருக்கும் ஏற்றாற் போல், (அரசியல், சமூகம், ஆன்மிகம், கிரிக்கெட், பல்லவியும் சரணமும், சிறுகதை, சினிமா, தொழில்நுட்பம், அறிவியல், நகைச்சுவை, வலைச்சூழல் என்று) பல சப்ஜெக்ட்களில் என் நட்சத்திர வாரப் பதிவுகள் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன் என்று நம்புகிறேன்! (நீங்கள் தான் சொல்ல வேண்டும்!)

அது போலவே கி.அ.அ.அனானி பதிவுகளை தவிர்த்து விட்டேன் ;-)

கொஞ்சம் சுய தம்பட்டம்!

தமிழ்மண நட்சத்திர வரலாற்றில் முதன்முறையாக (சன் டிவியில் வரும் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" போல் வாசிக்கவும்:)) எனது நட்சத்திர வாரத்தில் 26 புத்தம் புதிய பதிவுகளை (இப்பதிவையும் சேர்த்து, மீள்பதிவுகளையும் சேர்த்தால் 33!) இட்டு ஓர் அரிய பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளேன் :)

உங்கள் ஊக்கமும் இதற்கு ஒரு காரணம் !


Please Vote!
பாலாவின் நட்சத்திர வாரம் எப்படியிருந்தது ?

தேறவில்லை
பரவாயில்லை
நன்று
சிறப்பு


இந்த நட்சத்திர வாரத்திற்காக அதிகம் உழைத்து விட்டதால், ஒரு 'பிரேக்' முடிந்து பின்னர் சந்திப்போம்! விடை பெறுகிறேன்.

வாக்குப் பெட்டியில் உங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

Star25b. சிறுவயது சிந்தனைகள் - 6 (மீள்பதிவு)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

வடக்குக் குளக்கரைத் தெருவில் அமைந்த ஒரு பழைய வீட்டில் நாங்கள் வாழ்ந்த காலத்தில், பள்ளியில் உடன் படித்த பல நண்பர்களின் வீடுகள் அடுத்தடுத்து அமைந்திருந்தன (அல்லது) அத்தெருவின் வீடுகளில் இருந்த பிள்ளைகள் எல்லோரும் நண்பர்களாக இருந்தோம் என்றும் கொள்ளலாம்! அதென்னவோ, எங்கள் தெருவில் ஆண்பிள்ளைகள், பெண்பிள்ளைகளை விட அதிக எண்ணிக்கையில் இருந்தனர். பெண்பிள்ளைகள் என்றால், 5 அல்லது 6 பேர் (என் தமக்கையும் சேர்த்து) தான் இருந்தனர். ஆனால் ஆண்பிள்ளைகளோ ஏராளம்! கிட்டத்தட்ட 40 தடியர்கள் இருந்தோம்! பள்ளி முடிந்து நாங்கள் அனைவரும் வீடு திரும்பிய பின் ஒரு முக்கால் மணி நேரம் தெருவே இரைச்சலாக இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! பின்னர், நாங்கள் கடற்கரைக்கு, கிரிக்கெட் அல்லது கபடி விளையாடச் சென்று விடுவது வழக்கம்.

எங்கள் குழுவிலிருந்த ஒருவருக்கும் பொதுவாக, பெண்பிள்ளைகளை கேலி, கிண்டல் செய்யும் பழக்கம் கிடையாது. பள்ளி, பள்ளி விட்டால் நிறைய அரட்டை/விளையாட்டு, கொஞ்சம் படிப்பும், என்று வாழ்ந்த காலமது! எங்கள் வீட்டின் இரு மருங்கிலும் கடைகள் இருந்தன. ஒன்று 'நாயுடு மளிகை' என்று அழைக்கப்பட்ட விஜயா ஸ்டோர்ஸ்; மற்றது, மணியை ஓனராகக் கொண்ட, 'மணி கடை' என்ற பொட்டிக்கடை. மணிகடையில் எங்களுக்கு வேண்டிய சகலமும் கிடைக்கும். பர்ஃபி, கடலை உருண்டை, புளிப்பு மிட்டாய், தேங்காய் பிஸ்கெட், பன்னீர் சோடா வகையறாக்களும், எங்கள் விளையாட்டு சீஸனுக்கு ஏற்றாற்போல், கோலி, பம்பரம், ரப்பர் பந்து, கில்லி தாண்டு போன்றவைகளும்! மணி சற்று குள்ளமான குண்டான உருவம் உடையவர். அவரது கடை சற்று உயரத்தில் அமைந்திருந்ததால், கடையில் ஏறி அமர்வதற்கு ஒரு சிறு ஏணி வைத்திருந்தார். மணி கடையில் ஏறிய பிறகு, அவரை அவ்வப்பொழுது நாங்கள் கிண்டல் செய்வது வாடிக்கையாக நடக்கும் ஒரு விஷயம்! கடையிலிருந்து வேகமாக இறங்கி வந்து எங்களை பிடிப்பது அவரால் இயலாத காரியம் என்பதால்!

அவர் கடையில் ஒரு வகை லாட்டரி பிரசித்தம். ஒரு அட்டையில், மடிக்கப்பட்ட சிறு கலர் காகித சீட்டுகள் பல வரிசைகளில் ஒட்டப்பட்டிருக்கும். பரிசுக்குரிய சீட்டில் ஒரு எண் அச்சிடப்பட்டிருக்கும். 5 பைசாவுக்கு ஒரு சீட்டை கிழித்துப் பிரிக்கலாம். உள்ளிருக்கும் எண், ஒரு சிறிய பரிசுப்பொருளையோ, சாப்பிடும் பதார்த்தத்தையோ குறிக்கும். எண் அச்சிடப்படாத (வெற்று) சீட்டை கிழித்துப் பிரிக்க நேர்ந்தால், கொடுத்த காசு அம்பேல்! பெரும்பாலும் இப்படியே நிகழ்ந்தாலும், நாங்கள் நம்பிக்கை இழக்காமல்(!) நிறைய காசு விட்டிருக்கிறோம்! சூதாட்ட ஆர்வத்தின் ஆரம்ப விதைகள் அப்போதே விதைக்கப்பட்டு பின்னாளில் மூணு சீட்டும், ரம்மியும் விடிய விடிய விளையாடியிருக்கிறோம்!!! சான்றோர் களவையும் கற்று மறக்கச் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? என்ன, மறப்பது சற்று கடினமான விஷயம், அவ்வளவே!!!

அடுத்த தெருவில், வேலு கடை (அதுவும் பொட்டிக் கடை தான்!) இருந்தது. அக்காலத்திலேயே, தற்போது டாடா, அம்பானிகளுக்கு இடையே நிலவுவது போல(!) மணிக்கும் வேலுவுக்கும் இடையே ஒரு தொழில் போட்டி (BUSINESS RIVALRY!) நிலவியது என்று கூறலாம்! வேலு கடையில் ஒரு பொருளை வாங்கச் சென்றால், மணி தன் கடையில் அப்பொருளை என்ன விலைக்கு விற்கிறார் என்று வேலு கேட்டு தெரிந்து கொள்வார். "அதை விட 5 பைசா கம்மி விலையில் நான் தருகிறேன். உன் நண்பர்களிடமும் சொல்லு!" என்பார். நான் வேலைக்குச் சேர்ந்த சமயம், மணி கடையை மூடி விட்டு, எங்கோ சென்று விட்டார். வேலு, இறந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது.

திருவல்லிக்கேணியின் பல பழைய வீடுகள் இடிக்கப்பட்டு, அடுக்கு மாடி குடியிருப்புகள் தோன்றி விட்ட நிலையிலும், நான் வாழ்ந்த பழைய வீடும் அதை ஒட்டிய மூன்று வீடுகளும் இன்று வரை அப்படியே இருப்பது ஆச்சரியமான ஒரு சங்கதி தான்! ஆனால், நான் அந்த வீட்டினுள் நுழைந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகி விட்டன. நான் வாழ்ந்த பழைய வீடும், அடுக்கு மாடி குடியிருப்பால் விழுங்கப்படுவதற்கு முன், ஒரு முறை உள்ளே சென்று பார்த்து, சிறிது நேரம் என் பழைய ஞாபகங்களோடு உறவாட வேண்டும், சில புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், என்று சில வருடங்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்! ஏதோ ஒருவித தயக்கம்!

சில நாட்களுக்கு முன், என் மகளுடன் அவ்வழியாக சென்று கொண்டிருந்த என்னை, நான் வாழ்ந்த பழைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் என் சிறுவயது தோழன் நரசிம்மன் அழைத்து பேசிக் கொண்டிருந்தான். அவனிடம் "நான் இருந்த பழைய வீட்டை என் மகளுக்கு காட்ட வேண்டும், கூட வருகிறாயா?" என்றவுடன், தற்போது அவ்வீட்டில் வசிப்பவர்களுடன் பழக்கமில்லை என்று கூறி மறுத்து விட்டான். என் மகளின் மிகுந்த கட்டாயத்தின் பேரில், வாசலில் அமர்ந்திருந்த கண் பார்வை மங்கிய பாட்டியின் விசாரணைக்கு உட்பட்டு, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு வலது காலை முன் வைத்து வீட்டில் நுழைந்தேன்!

பழைய மர வாசற்கதவு இரும்புக் (grill) கதவாக மாறியிருந்தது. இடதுபுற திண்ணை இன்னும் இருந்தது. ரேழிக்கு முன்னே அக்காலத்தில் காணப்பட்ட, வேலைப்பாடுகள் நிறைந்த, பிரம்மாண்ட மரக்கதவு இருந்த இடத்தில், ஒரு நோஞ்சான் கதவு முளைத்திருந்தது! மேல்தளத்தில் பதிக்கப்பட்ட சதுர கண்ணாடி வாயிலாக ஒளி பாய்ந்தும், சற்றே இருள் சூழ்ந்த, அதே பழைய நடை! அதே பழைய வாசனை, சில்லிப்பு! அடுத்தடுத்து இருந்த வலதுபுற அறைகளுக்கு (
அக்கால சமையலறைகள்) இடையே இருந்த சுவர்கள் இடிக்கப்பட்டு, இரு குடும்பங்கள் வசிக்கத்தக்க 2 போர்ஷன்கள் உருவாகியிருந்தன. பழைய மாடிப்படிகளுக்குக் கீழே, Hand pump முன்பிருந்தது போலவே! ஆனால், அப்போதிருந்த ஒரு பித்தளை பாயிலரை காணவில்லை!!! வீட்டின் பின்புறம் இருந்த குளியல் மற்றும் கழிவறைகளின் கதவுகள் மட்டும் புதிதாக இருந்தன! 'பல ஆடைகள்' கண்ட துணி துவைக்கும் கல் அப்படியே இருந்தது!

அக்காலத்தில் எங்களின் சக குடித்தனவாசிகளைப் பற்றிய ஞாபகங்கள் பெருக்கெடுத்தன! குறிப்பாக, எப்போதும் மங்கலகரமாகவும், சிரித்த முகத்துடனும் காணப்பட்ட, சுமங்கலியாய் இறந்து போன ராஜமாமி, அவரது 'பஞ்ச பாண்டவ' மகன்களில் ஒருவனான 'சிவாஜி' சாரதி, எச்சில் தெறிக்க படபடவென பேசும் 'தீர்த்தவாரி' ராகவன் மாமா, அதையும் பொருட்படுத்தாமல் அவருடன் பேசத் தூண்டும் வகையில் அமைந்த அவரது மிக அழகிய மகள் 'வெடி' ரமா, பூமா டீச்சரை தவிக்க விட்டு, 12 வருடங்களுக்கு முன் திடீரென்று காணாமல் போன, PONDS கம்பெனியில் வேலை பார்த்து வந்த 'வெத்தலை பாக்கு' ஸ்ரீநிவாசன் மாமா, வாய் ஓயாமல் வம்படிக்கும் வாளிப்பான சுகுணா மாமி, தற்போது ராணுவத்தில் பணி புரியும் நண்பன் சம்பத் குமார், ஓய்வு ஒழிச்சலின்றி எந்நேரமும் ஏதாவது வேலை செய்து கொண்டிருந்த என் பாட்டி ஜானகியம்மாள், உத்தரத்திலிருந்து கயிற்றை தொங்கவிட்டு, அதில் கிரிக்கெட் பந்தை கட்டி, வீட்டிற்குள்ளேயே பயிற்சி செய்த ஸ்ரீதர், SV சேகருடன் நாடகங்களில் நடித்த பக்கத்து விட்டு 'பொட்லம்' ராஜாமணி, பாத்திரம் கழுவி துணி துவைத்து எங்களுக்காக மாங்கு மாங்கென்று உழைத்த, இன்று வரை எங்கள் மேல் பிரியத்துடன் இருக்கும் பணிப்பெண் கன்னியம்மாள், என் திருமணத்திற்கு விலை உயர்ந்த கடிகாரத்தை பரிசாக வழங்கிய, தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் கன்னியம்மாளின் தாயார் லஷ்மியாச்சி ஆகியோர் குறித்த நினைவுகள் / நிகழ்வுகள் பல தோன்றின.

என் மகளுக்கு வீட்டைப் பற்றியும், அங்கு வாழ்ந்த மனிதர்கள் பற்றியும் விவரித்தபடி, மாடியேறி சென்றேன். முன் போலவே, காற்று முகத்தில் அடித்து வரவேற்றது! கீழே மாற்றப்பட்டது போலவே, மாடியிலும், இரு படுக்கையறைகள், சமையலறைகளாக மாற்றப்பட்டு, இரு குடும்பங்கள் வசிக்கத்தக்க 2 போர்ஷன்கள் உருவாகியிருந்தன. நான் கோலி, கில்லி, கிரிக்கெட் ஆடிய மொட்டை மாடிக்குச் செல்ல அக்காலத்தில் படிக்கட்டுக்கள் கிடையாது. பக்கத்து வீட்டு வழியாகவோ அல்லது ஜன்னல் கம்பி பிடித்து, சாரத்தில் தலையை இடித்துக் கொள்ளாமல் சிரமப்பட்டு ஏறியோ மொட்டை மாடிக்குச் செல்வது எங்கள் வழக்கம்! தற்போது, மேலே செல்ல ஒரு இரும்பு ஏணி முளைத்திருந்தது! நான் பார்த்தவரை, பழைய வீடு பெருமளவு அப்படியே தான் இருந்தது. பழைய மனிதர்களைத் தான் காணவில்லை! வீட்டை புகைப்படங்கள் எடுக்கவும் மறந்து விட்டேன்!

என்றென்றும் அன்புடன்
பாலா


************************
இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:
dondu(#4800161) said...
"நான் வாழ்ந்த பழைய வீடும், அடுக்கு மாடி குடியிருப்பால் விழுங்கப்படுவதற்கு முன், ஒரு முறை உள்ளே சென்று பார்த்து, சிறிது நேரம் என் பழைய ஞாபகங்களோடு உறவாட வேண்டும், சில புகைப்படங்களும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், என்று சில வருடங்களாகவே எண்ணிக் கொண்டிருந்தேன்"

இந்த இடம் வரை நீங்கள் எழுதியது நான் ஏற்கனவே உங்கள் இப்பகுதியில் படித்தது போன்ற உணர்வைத் தந்தது. ஆனால் உங்கள் முந்தைய 5 பகுதிகளைப் பார்க்கும் போது எனக்கு இப்போது அப்பத்திகள் தென் படவில்லை. ஒரு வேளை போன சனிக்கிழமை தங்கள் வீட்டுக்கு வந்த போது இது பற்றிப் பேசப்பட்டதோ? அப்படியும் தோன்றவில்லையே. அல்லது நீங்கள் முன்பு எழுதியதை இணையம் விழுங்கி அதை இப்போது உங்கள் நகலிலிருந்து புதுப்பித்தீர்களா? புதுப்பிக்கும்போது இற்றைப்படுத்தி (update) எழுதினீர்களா? எது எப்படியாயினும் அருமையான நினைவுகள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3:58 PM, January 21, 2005

Moorthi said...
ஆட்டோகிராப் மாதிரியான நினைவுகள். காக்காய் கடி கடித்துத் தின்ற மிட்டாய்களும் ஓடிப்பிடித்து விளையாடிய நினைவுகளும் எங்கள் பழைய வீடும் என்னுள் வந்துபோனது. பழைய நண்பர்களின் நினைவுகளையும் என்னுள் எழுப்பிச் சென்றீர்கள்.

10:17 AM, January 22, 2005

Anonymous said...
good recollection

2:45 PM, January 22, 2005

CT said...
Made me to remember the movie autograph except I don't see any infatuation related incidents.........nice memoir

8:30 AM, September 03, 2006
******************************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star25a. மெட்டி ஒலி எனும் 'மெகா' பாரதம் --- பாலா SPECIAL *மீள்பதிவு*

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

இப்படித் தான் வைரமுத்து, மெட்டி ஒலியை 'மெகா' பாரதம் என்று மெட்டி ஒலியின் முடிவு விழா உரையில் வர்ணித்தார் ! அதற்கு, எப்படி இதிகாசங்களான மகாபாரதமும் ராமாயணமும் பல அழகான கிளைக்கதைகளின் தொகுப்போ, அவ்வாறே மெட்டிஒலியும் என்று ஒப்பிட்டுக் கூறினார். மெட்டிஒலி ஏறக்குறைய 811 episodes (அதாவது, 162 வாரங்கள் !) கொண்ட ஒரு தொடராக சன் டிவியில் ஒளிபரப்பானது. இதில் நான் ஒரு 150 episodes தான் பார்த்திருப்பேன் ! இருந்தும் எனக்கு கதையை புரிந்து கொள்வதில் ஒருபோதும் பிரச்சினை இருந்ததில்லை !!!!!

மெட்டிஒலி பலரது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே ஆனது. தொடரின் கதாபாத்திரங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மக்கள் பிரச்சினைகள் ஆயின ! இத்தொடரின் பத்து எபிஸோடுகளையாவது பார்க்காதவர் தமிழ்நாட்டிலேயே கிடையாது என்று அடித்துக் கூறலாம். அவ்வளவு பிரபலம் அடைந்தது !

யதார்த்தமான மற்றும் தரையைத் தொடும் (down-to-earth !) கதையமைப்பு மெட்டிஒலிக்கு பக்கபலமாக இருந்தது. ஆனாலும், சரோ கதாபாத்திரம் வாயிலாக பெண்ணடிமைத்தனத்தையும், ராஜம்மா கதாபாத்திரத்தின் மூலம் கொடூரத்தையும் இவ்வளவு அதிகபட்சமாக காட்டியிருக்க வேண்டாம் என்பது என் கருத்து. இது எதிர்மறை விளைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது ! தொடரில் வரும் சிதம்பரம் என்ற முக்கிய கதாபாத்திரம் பிரச்சினை இல்லாமல் இருந்த நாளே கிடையாது எனலாம். ஆனாலும் அவர் வெளிப்படுத்தும் சீர் தூக்கி நோக்கும் குணமும், மன உறுதியும் அலாதியானது. டெல்லி குமார் இவ்வேடத்தில் வாழ்ந்திருந்தார் என்று கூறலாம்.

மெட்டி ஒலி குடும்ப சச்சரவுகளையும், ஆணாதிக்கத்தயும் அதிகமாக பிரதிபலிப்பது போல் தோன்றினாலும், எல்லோரும் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. தந்தை மகள்களுக்கு இடையே ஆன கவிதை கலந்த உறவை, இயக்குனர் திருமுருகன் நேர்த்தியாக, தொடரில் வரும் பல நிகழ்வுகளில் படம் பிடித்துக் காட்டியுள்ளார். செல்வம் என்ற கதாபாத்திரத்திரம், நிஜ வாழ்வில் பல ஆண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டதோடு, அதில் நடிப்பவரும் பாத்திரத்தை உள்வாங்கி, மிக அருமையாக நடித்துள்ளார்.

மெட்டி ஏற்படுத்திய ஒலியால், ஒன்பது மனிக்கு வேலையிலிருந்து பசியோடு வீடு திரும்பும் கணவன்மார்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாயினர் ! தாய்மார்கள் அழும் குழந்தைகளை மெட்டிஒலி தொடங்குவதற்கு முன்பே உணவு கொடுத்து உறங்க வைத்தார்கள் ! கூட்டுக் குடும்பங்களில் வாழும் இளம்தம்பதியினருக்கு கொஞ்சிப் பேச அவகாசம் கிடைத்தது ! ஊர் சுற்றி விட்டு வரும் பிள்ளைகள் மெட்டிஒலி சமயத்தில் பெற்றோரிடம் திட்டு வாங்காமல் நைசாக வீட்டுக்குள் நுழைய வழி ஏற்பட்டது. நகரின் ஒதுக்குப்புற வீடுகளில் திருடர்கள் தங்கள் கை வண்ணத்தை காட்ட வழி ஏற்பட்டது !

மெட்டிஒலி பார்த்த சில கணவர்கள் தாங்கள் ரவி மற்றும் மாணிக்கம் (கதாபாத்திரங்கள்!) போல் அவ்வளவு மோசமாக இல்லை என்று உள்ளுக்குள் சந்தோஷம் அடைந்தனர். சிலர் கோபியும் தங்களை போல் ஒரு பெண்டாட்டி தாசன் என்று சிலாகித்தனர். இன்னும் சிலர், போஸ் போல தங்களது மனைவிகளை விட்டு எகிற முடியலையே என்று ஆதங்கப்பட்டனர். சில மாமியார்கள் ராஜம்மாவை விட தாங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்று மருமகள்களிடம் சுட்டிக் காட்டினர். சில பெண்கள் தாங்கள் தனம் போல வாயாடியாகவும், செல்வத்தின் மனைவி போல் ஓடுகாலியாகவும், கோபியின் வீட்டுப் பெண்கள் போல வம்படிப்பவர்களாகவும் இல்லை என்று ஆறுதல் அடைந்தனர்.

மெட்டிஒலியால் சில நேர்மறை விளைவுகளும் உண்டு ! மெட்டிஒலி பார்த்து, செல்வம் போல் ஒரு நல்லதம்பி இல்லையே என்று எண்ணிய அண்ணன்மார்களும், சிதம்பரம் போல் ஒரு பாசமிகு தந்தை இல்லையே என்று நினைத்த மகள்களும், போஸ் போல பாசமான மருமகன் இல்லையே என்றெண்ணிய மாமன்களும், ரவியின் தந்தை போல மாமனார் இல்லையே என்று நினைத்த மருமகள்களும் நிச்சயமாக உண்டு ! கணவனிடம் அல்லல்பட்டு, சொந்தக்காலில் நின்ற லீலாவையும், கணவனால் கைவிடப்பட்டும் வாழ்வை துணிந்து எதிர்கொண்ட நிர்மலாவையும் பார்த்து தன்னம்பிக்கை பெற்ற பெண்களும் இருப்பர்.

இந்த மெகா காவியத்தை ஒருவர் உட்கார்ந்து தொடர்ச்சியாகப் (back to back !) பார்ப்பதன் வாயிலாக ஒரு கின்னஸ் சாதனையே படைத்து விடலாம் ! ஒரு எபிஸோட் 20 நிமிடங்கள் (விளம்பர இடைவேளை தவிர்த்து) என்று வைத்துக் கொண்டால் கூட மெட்டிஒலியை (இடைவெளியே இல்லாமல்) முழுதும் பார்த்து முடிக்க, 16220 நிமிடங்கள் அல்லது 270 மணிநேரம் அல்லது 11 நாட்கள் ஆகும் !!!

முன்பு சன் டிவியில் "சித்தி" தொடர் ஒளிபரப்பாகி கொண்டிருந்தபோது, பொதுவாக, அது தொடங்கும் நேரம் தான் நான் பணியிலிருந்து வீடு திரும்புவேன். என்னைக் கண்டவுடன் என் மகள் (அப்போது நாலு வயது) "சித்தி வந்தா தான் அப்பா வருவா" என்பாள். நான் உற்சாகமாக, "அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! உடனே, என் துணைவியார் ஒரு முறை முறைத்து, "போதுமே, உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" என்பார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

**************************************
இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Mookku Sundar said...
//என்னைக் கண்டவுடன் என் மகள் (அப்போது நாலு வயது) "சித்தி வந்தா தான் அப்பா வருவா" என்பாள். நான் உற்சாகமாக, "அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! //

வீட்டுக்கு வீடு வாசப்படி...:-)

அசத்தல் போங்கோ. !

10:39 PM, June 20, 2005

லதா said...
//உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" //

சித்தியைக் கூடத் தத்து எடுத்துக்கொள்ள முடியுமா ? :-))

3:15 AM, June 21, 2005

-L-L-D-a-s-u said...
//தரையைத் தொடும் (down-to-earth !) //

ஆஹாஹ்ஹா

4:32 AM, June 21, 2005

பினாத்தல் சுரேஷ் said...
டிவி மெகாத்தொடர் என்பதனாலேயே கிண்டல் அடிக்க பலர் காத்திருக்க, அது ஒன்றும் அப்படித் தீண்டத்தகாத வஸ்து அல்ல எனும் பார்வையோடு எழுதப்பட்ட நல்ல நேர்மையான அலசல் பாலா.

தொடரின் நடுவே வந்த சில மெஸேஜ்கள் மெட்டி ஒலி பார்த்தவர்களில் ஒரு சிறு சதவீதத்தையாவது பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லை - குறிப்பாக, இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற ரவி கதாபாத்திரத்துக்கு மற்றவர்கள் செய்யும் அட்வைஸ், பெண்கள் படித்து வேலைக்குச் செல்வதால் கிடைக்கும்
சுயமரியாதை பற்றிய விவாதங்கள்..

நிச்சயமாக ஒரு நல்ல தொடர்.

9:26 AM, June 21, 2005

அன்பு said...
அருமையா எழுதியிருக்கீங்க பாலா... ஒரு சிலர் மெட்டிஒலியத்திட்டினா கைதட்ட ஆளுவருவாங்கன்னு எழுதிட்டுருக்கும்போது - உங்களுடைய பார்வையில் எழுதியதற்கு நன்றி. இங்கு சிங்கையில் இரவு 10 மணியிலுருந்து 11:30க்கு மாற்றிய பின்னாலும்கூட வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம் பார்த்தோம் - பல நாட்கள் பதிந்துவைத்து...

உண்மையில் யார் எத்தனை குறைகளைச் சுட்டிக்காட்டினாலும், அதற்கும் மேல் மெட்டிஒலி ஒரு அருமையான தொடர். இப்போது வரும் பெரும்பாலான அடிதடி திரைப்படங்களுக்கு அந்த தொடர் எவ்வளவோ மேல்... எங்கள் 5 வயது மகளுக்கும் அந்த தொடர் முடிந்ததில் மிகுந்த வருத்தம்!

மீண்டும் நன்றி.

11:36 AM, June 21, 2005

enRenRum-anbudan.BALA said...
சுந்தர், அன்பு, சுரேஷ்,
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !

லதா, தாஸ், மூக்கர்,
உங்கள் நக்கல்S-ஐ ரசித்தேன் ;-)

அன்பு,
//எங்கள் 5 வயது மகளுக்கும் அந்த தொடர் முடிந்ததில் மிகுந்த வருத்தம்!
//
என் மகளுக்கும் (மூன்றரை வயது!) தான் :)

சுரேஷ்,
//தொடரின் நடுவே வந்த சில மெஸேஜ்கள் மெட்டி ஒலி பார்த்தவர்களில் ஒரு சிறு சதவீதத்தையாவது பாதித்திருக்கும்
என்பதில் ஐயமில்லை
//
நிச்சயமாக, ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

8:39 PM, June 21, 2005

வீ. எம் said...
பாலா,
நல்ல அலசல்.நான் மெட்டி ஒலி பற்றி ஒரு சின்ன அலசல் போட்டேன் போன வாரம் , பார்த்தீர்களா?
தங்களையுடையது அதை விட ஆழமான அலசல்..வாழ்த்துக்கள்!!
//"அம்மாவிடம் பெர்மிஷன் கேளு, உனக்கும் சித்தி வருவா" என்பேன் !!! உடனே, என் துணைவியார் ஒரு முறை முறைத்து, "போதுமே,//
// உங்கள் தத்துப்பித்தை குழந்தையிடமும் காட்ட வேண்டுமா ?" என்பார்//

உங்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம்...
தங்கள் துனைவியாருக்கு உண்மையை பேசும் குணம் அதிகம் ! :)

வீ எம்

12:39 PM, June 22, 2005

enRenRum-anbudan.BALA said...
வீ.எம்,

அலுவலகத்தில் பரபரப்பான (அழுத்தம் தரும்!) வேலைகளுக்கு நடுவே, உங்கள் பாராட்டு ஓர் உற்சாகத்தை தந்தது. அதற்கு என் நன்றி :)

தங்களது மெட்டிஒலிலிலிலிலிலிலி(!!!) பதிவைப் படித்தேன். நல்ல பதிவு.

//உங்களுக்கு கொஞ்சம் குசும்பு அதிகம்...
தங்கள் துனைவியாருக்கு உண்மையை பேசும் குணம் அதிகம் ! :)
//
இதைக் கேட்டு எனக்கு வருத்தம்(!) ஏற்பட்டாலும் என் மனவி மகிழ்ச்சி அடைவார் என எண்ணுகிறேன் ;-)

எ.அ. பாலா

3:21 PM, June 22, 2005

Anonymous said...
Meetioli serialin climax parkamudavili endru oru pen tharkolai seithullar, Vazhkaikku panpadatha inda mathiri serialinal oru vazhlkai mudinthathu mikavum kodumai. Serialin thakkam intha avavukku iruppathu nallathillai.

http://thatstamil.indiainfo.com/news/2005/06/22/suicide.html

3:36 PM, June 22, 2005

பினாத்தல் சுரேஷ் said...
Anon Says: //Meetioli serialin climax parkamudavili endru oru pen tharkolai seithullar, Vazhkaikku panpadatha inda mathiri serialinal oru vazhlkai mudinthathu mikavum kodumai. Serialin thakkam intha avavukku iruppathu nallathillai//

While this has to be condemned, what the serial directors or the TV can do to avert this! Much as the paalabishegam cases in Cinema.. Oorukku oru paithiyam irukku -- may be this was her ambition, get a death which is dicussed..

9:39 PM, June 22, 2005

PositiveRAMA said...
பாலா! சூப்பர் விமர்சனம்ங்க!

11:19 AM, June 23, 2005

Anonymous said...
positiverama,
Thanks for the appreciation !
---BALA

11:34 PM, June 23, 2005
***********************************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star25. நண்பனைக் காப்பாற்றுங்கள்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
***********************************
நண்பர் நிலவு நண்பனின் வேண்டுகோளின் பேரில் அவர் பதிவை இங்கே மீள் பிரசுரம் செய்கிறேன். கவனத்திற்கு கொண்டு வந்த அவருக்கு என் நன்றி.
****************


SAVE MY FRIEND

Mr. Raj Mohamed young guy, he's previously working here (s'pore) under work permit. Now he come under travel visa for propose him Employment pass. Unfortunately he feels not well. Now he's under coma stage in NUH CHANGI HOSPITAL . Every day want to pay the hospital more money. Doctor said now can't carry to India. Because him body condition not well to ply. Right now we can't able to arrange much money. Please to share your contribution, what ever you can share its S$10.00 also valuable for us. And also please forward this mail too globally and sms to your Singapore friend circle .

Human being pleases to call:

Mr.Pirabhu: +65 81477688

Pandiidurai:+65 82377006



You can top up the money to following bank account also: posb A/c No: 039-64076-7

After remit your valuable contribution please to message the above contact no


Thanks

Friendly

Pandiidurai


உயிர் காக்க உதவுங்கள ்

என் நண்பரின் நண்பர் எதிர்பாரதவிதமாக உடல்நலகுறைவு ஏற்பட்டு NUH CHANGI மருத்துவமனையில் இருக்கிறார் . இந்தியாவிற்கு அவரை அழைத்துசெல்லும்அளவு அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை என்று டாக்டர் கூறிவிட்டனர் . முன்பு அவர் வேலை செய்யும் உரிமத்தில் இங்கு பணிபுரிந்தவர் . தற்பொழுது அவர் தனது டிரவலிங் விசாவில் employment pass-i துரிதப்படுத்த வந்துள்ள இவ்வேளையில் இத்தகு துயரம் ஏற்பட்டதாலே உதவும் கரங்களை நோக்கி நாங்கள் வந்துள்ளோம். எங்களால் இயன்ற அளவு உதவிகளை செய்துவருகிறோம் ஆனால் தினமும் அதிகரிக்கும் மருத்துவசெலவினால் கருணையுள்ளம் கொண்ட உதவும் கரம் உங்களை தேடிவருகிறோம். 7000 வெள்ளிக்கும் மேல் மருத்துவசெலவிற்கு தேவைபடுகிறது . உங்களால் இயன்ற 10 வெள்ளியாக இருந்தாலும் உதவுங்கள். இந்த மடலினை உலகம் தழுவிய நண்பர்களுக்கு அனுப்புங்கள். குறுஞ்செய்தியாக உங்கள் செல்பேசிவழி உங்களின் சிங்கப்பூர் நண்பர்களுக்கு அனுப்புங்கள்

மனிதநேயமிக்கவர்கள் தொடர்பு கொள்ள

பிரபு: +65 81477688
பாண்டித்துரை: +65 82377006


உங்களின் உதவியை நேரடியாக வங்கியில் செலுத்த: posb A/c No: 039-64076-7

நம்பிக்கையுடன்
பாண்டித்துரை

- ரசிகவ் ஞானியார்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star24. மகிழ்ச்சியாய் இரு மனிதா!

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
************************************

பல நேரங்களில் நம்மை நாமே தேற்றிக் கொள்கிறோம், நம் வாழ்வு சுகமாகும் -- நமக்கு திருமணமானால் ... ஒரு குழந்தை பிறந்தால் என்று!

அதன் பின், குழந்தைகள் வளர்ந்து ஆளாகும் வரை விரக்தி -- அவர்கள் வளர்ந்து ஆளாகி விட்டபின் எல்லாம் சிறப்பாக அமையும் என்று நினைத்துக் கொள்கிறோம்!

நம் மனைவிகள்/கணவர்கள் இன்னும் சற்று விட்டுக் கொடுப்பவராக மாறினால் .. நம்மிடம் இன்னும் சற்று பெரிய கார் இருந்தால் ... எங்கேயாவது நீண்ட விடுமுறைக்குச் சென்றால் ... நாம் பணி ஓய்வு பெற்றால் ... நம் வாழ்க்கை சரியாகி விடும் என்று ஒருவித பிடிவாதத்துடன் விடாமல் எண்ணிப் பார்க்கிறோம்!

ஆனால், மகிழ்ச்சியாக இருப்பதற்கு நிகழ்காலத்தை விட சிறந்த சமயம் இல்லை என்பது தான் உண்மை. நம் வாழ்வில் போராட்டங்களும், சங்கடங்களும் இருப்பதை ஒப்புக் கொண்டு, அவற்றையும் மீறி மகிழ்ச்சியாக இருக்க முடிவெடுக்க வேண்டும்!

இந்த தடங்கல் விலகிய பின் ... இந்த கஷ்டம் தொலைந்த பின் ... இந்த வேலை முடிவடைந்த பின் .... என் இனிய வாழ்வு தொடங்கும் என்று பல சமயங்களில் எண்ணியிருக்கிறேன். ஆனால், அந்தத் தடங்கல்கள், கஷ்டங்கள், வேலைகள் ஆகியவை அடங்கியது தானே வாழ்வு என்பது ஒரு வழியாக புரிந்தது!

இப்படியான கண்ணோட்டம் ஒன்றைத் தெளிவுபடுத்தியது. மகிழ்ச்சிக்கென்று தனியாக பாதை ஒன்று கிடையாது, மகிழ்ச்சி தான் அந்தப் பாதையே!

ஆகவே, நண்பர்களே,

வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக செலவழியுங்கள்!

படிப்பு முடிவதற்கோ, மீண்டும் பள்ளி செல்வதற்கோ, எடை குறைவதற்கோ / கூடுவதற்கோ, குறிப்பிட்ட பணி தொடங்குவதற்கோ, வெள்ளி மாலைகளுக்கோ, ஞாயிறு காலைகளுக்கோ, புதிய கார் வாங்குவதற்கோ, கடன் அடைவதற்கோ, கோடை / குளிர் காலம் வருவதற்கோ, மாதத்தின் ஏதாவது ஒரு தேதிக்காகவோ, மரணத்துக்காகவோ, மீண்டும் பிறப்பதற்காகவோ ... காத்திருக்கிறேன் என்று கூறிக் கொண்டு மகிழ்ச்சியை தள்ளிப் போடாதீர்கள்!

மகிழ்ச்சி என்பது ஒரு பிரயாணம், சேரவிருக்கும் இடமல்ல! இந்தத் தருணத்தை விட மகிழ்ச்சியாக இருக்க சிறந்த தருணம் இல்லை என்றெண்ணி வாழ்க்கையை நடத்துங்கள்!

**********************************

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star23. சச்சினின் Nervous Nineties Jinx

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்


நமது லிட்டில் மாஸ்டருக்கு, இவ்வருடம் என்ன ஆனதென்று புரியவில்லை! இவ்வருடம் ஆடிய பல இன்னிங்க்ஸ்-களில், தொண்ணூறு ஓட்டங்கள் எடுக்கும் வரை, திறமையாக, சிறப்பாக பந்து வீச்சை எதிர் கொள்பவரை (அவர் தொண்ணூறை எட்டியவுடன்) ஒரு வித அச்சமும், நம்பிக்கையின்மையும் ஆட்கொள்வது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது!

இந்த வருடம் மட்டும் 7 (டெஸ்டில் ஒரு தடவை, ஒரு நாள் ஆட்டங்களில் 6 தடவை) முறை, தொண்ணூறுகளில் தன் விக்கெட்டை பறி கொடுத்திருக்கிறார். அவற்றில் மூன்று தடவை (முறையே, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக) 99 ரன்களில் அவுட்!

எனக்கென்னவோ, சச்சின் தொண்ணூறை எட்டியவுடன், தன்னுடைய நார்மல் ஆட்டத்தைத் தொடராமல், நூறை எட்ட வேண்டுமே என்பதில் அதிக கவனத்தைச் செலுத்துவதும், தேவையில்லாத ஷாட்களை தேர்ந்தெடுப்பதும் தான், அவரின் இந்த "தொண்ணூறுகளில்" வீழ்ச்சிக்குக் காரணமாகத் தோன்றுகிறது. இதனால், பார்க்கும் நமக்கும் டென்ஷன் ஏறுவதற்குக் காரணமாகிறார் சச்சின் :)

தெண்டுல்கரின் ஒரு நாள் தொண்ணூறு ஸ்கோர்களின் பட்டியல்:

90 2 stumped 2 L World Cup 19 v Aus in Ind 1995/96 at Mumbai (d/n) [1065]
91 4 stumped 2 * L ChT (UAE) 1 v Eng in UAE 1997/98 at Sharjah (d/n) [1259]
95 2 bowled 2 W SJI Cup F1 v Pak in BD 1997/98 at Dhaka [1276]
93 1 bowled 2 * L C&U Ser. 7 v Pak in Aus 1999/00 at Hobart [1543]
93 2 caught 2 L 5th ODI v SA in Ind 1999/00 at Nagpur [1576]
93 2 caught 2 L Asia Cup 3 v SL in BD 2000 at Dhaka (d/n) [1598]
98 1 caught 2 W World Cup 36 v Pak in SA 2002/03 at Centurion [1975]
97 1 caught wk 1 W World Cup 46 v SL in SA 2002/03 at Johannesburg [1985]
93 2 caught wk 1 W 1st ODI v SL in Ind 2005/06 at Nagpur [2286]
95 2 caught 2 W 3rd ODI v Pak in Pak 2005/06 at Lahore (d/n) [2329]
99 2 run out 1 L Future 1 v SA in Ire 2007 at Belfast [2592]
93 2 bowled 2 W Future 2 v SA in Ire 2007 at Belfast [2593]
99 2 caught wk 1 W NW Series 2 v Eng in Eng 2007 at Bristol (d/n) [2613]
94 2 caught 2 W NW Series 6 v Eng in Eng 2007 at The Oval [2619]
99 2 caught wk 1 L 2nd ODI v Pak in Ind 2007/08 at Mohali (d/n) [2644]
97 2 bowled 2 W 4th ODI v Pak in Ind 2007/08 at Gwalior (d/n) [2646]

சச்சின் மொத்தம் 78 சதங்கள் (டெஸ்ட் - 37, ஒரு நாள் பந்தயம் - 41) குவித்திருப்பது நாம் அறிந்ததே! அவர், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் தவற விட்ட (அதாவது, தொண்ணூறுகளில் அவுட் ஆனதால்) 22 சதங்களை (டெஸ்ட் - 6, ஒரு நாள் பந்தயம் - 16) கணக்கில் கொண்டால், அவர் இந்நேரம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 100 சதங்கள் அடித்த சாதனையாளர் ஆகி இருப்பார்!!! என்ன செய்வது, விதி வலியது :)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

Star 22c.வெகுண்டு (என் முதல் சிறுகதை - மீள்பதிவு)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

வெகுண்டு

நான் படித்ததெல்லாம் சென்னையின் ஒரு பகுதியான திருவல்லிக்கேணியின் இந்து உயர்நிலைப் பள்ளியில் தான். கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையான அப்பள்ளி அமைந்த பெரிய தெரு, பெயரளவில் தான் பெரிசு. அவ்வளவாக அகலம் இல்லாத அத்தெருவில், பல வகைக் கடைகளும், வங்கிகளும், தங்கும் விடுதிகளும் 'Big street பிள்ளையார்' கோயிலும் இருந்தன. இதனால், பெரிய தெரு எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படும். தெருவின் இருமருங்கிலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, மீதமிருந்த தெருவின் மத்தியப் பகுதியில், மனிதர்களும், வாகனங்களும், அல்லிக்கேணி மாடுகளும் இடத்துக்காக சண்டை போட்ட வண்ணம் இருக்கும் காட்சியை, தினமும் காணலாம்.

சரி சரி, விஷயத்துக்கு வருகிறேன்! நான் அப்போது 7-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். உடன் படித்த மாணவனான .... பெயர் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது ... என் நல்ல நண்பன். ஆஜானுபாகு ஆக, நல்ல பால் வண்ணத்தில் இருந்த அவனுக்கு 'வெள்ளை குண்டன்' என்ற காரணப்பெயர் சூட்டப்பட்டு, நாட்போக்கில் அது மருவி, 'வெகுண்டு' என்பது நிலைத்து விட்டது. எனக்கும் பள்ளியில் புனைப்பெயர் உண்டு. அதற்கும் நான் கூற வந்த விஷயங்களுக்கும் சம்பந்தம் இல்லாததால், அதைப்பற்றிய ப்ரஸ்தாபம் இங்கு தேவையற்றது.

வெகுண்டுவின் தந்தையார், உடுப்பியிலிருந்து சென்னை வந்த கன்னடக்காரர். அவர் தொழில் என்ன என்று இந்நேரம் நீங்களே யூகித்திருப்பீர்களே! கரெக்ட்! அவர் மேற்கூறிய பெரிய தெருவில் 'உடுப்பி' வகை உணவகம் நடத்தி வந்தார். மனிதர், பக்திமான், நேர்மையானவர், மிக நல்லவரும் கூட. இந்த அளவுக்குக் கூட அவரை நான் உயர்த்திப் பேசவில்லை என்றால், நன்றி கெட்டவனாகி விடுவேன். அவ்வுணவகத்தில், வெகுண்டுவுடன் அமர்ந்து எவ்வளவு தடவை ஓசியில் சாப்பிட்டிருக்கிறேன் தெரியுமா?!

வெகுண்டுவை படிப்பில் மக்கு என்று கூற இயலாது. 'மஹாமக்கு' என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. சரஸ்வதி தேவி தன் கடாட்சத்தை அவன் பக்கம் திருப்ப மறந்தே போனாள். அவனை 'வெகுண்டு' என்று கூப்பிடுவோமே தவிர, அவன் ஒருபோதும் வெகுண்டெழுந்தது கிடையாது! சாதுவானவன். சுருள் சுருளாக முடியும், அமைதியான முகமும், அசப்பில் பார்ப்பதற்கு 'பாச மலர்' படத்தில் வரும் சிவாஜி கணேசன் போலவே இருப்பான். அதி தீவிர சிவாஜி ரசிகனும் கூட. அந்த 'படிக்காத மேதை'யால் தான் நானும் ஒரு சிவாஜி ரசிகன் ஆனேன். வெகுண்டுவின் நடை உடை பாவனைகளில் 'சிவாஜித்தனம்' மிகுந்திருக்கும். அவனுக்கு பல சிவாஜிப் படப்பாடல்களும் வசனங்களும் அத்துப்படி!! பல சமயங்களில் சிவாஜியின் திரைப்பட வசனங்களை எனக்கு அழகாகவே பேசிக்காட்டுவான். கேட்டே ஆக வேண்டும்! இல்லையென்றால், ஓசி சாப்பாடு கிடைக்காதே!

வெகுண்டு ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் ஒரு சிவாஜி பட வசனம் அல்லது பாட்டு தயாராக வைத்திருப்பான்! மளிகைக் கடைக்காரர் அவன் அம்மாவிடம் பணம் கேட்கும்போது 'வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கேன் தருவது பாக்கி!' என்பான். அவன் அண்ணன் தந்தையாரிடம் அவனைப் போட்டுக் கொடுத்தால் 'அண்ணன் காட்டிய வழியம்மா' என்று பாடுவான். என் அக்கா சற்று வேகமாக நடந்து சென்றால் 'ஆஹா, மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்' என்று கிண்டலடிப்பான். பக்கத்து வீட்டு அறுவைக் கிழவர் பரமபதம் பெற்றபோது 'போனால் போகட்டும் போடா' என்று விரக்தியில்லாமல் பாடினான்!!! மொத்தத்தில், வெகுண்டு இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது. வெகுண்டு ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, திருவிளையாடலில் சிவாஜி ஸ்டைலாக நடப்பது போல், குளியலறை நோக்கி நடந்து செல்லும் காட்சி இன்னும் என் கண்ணிலேயே நிற்கிறது.

வெகுண்டு அரையிறுதி தேர்வில் ஆங்கிலத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால், அவன் தந்தையார் வெகுண்டார். அவனை என் தாத்தாவிடம் ஆங்கில இலக்கணம் கற்க அனுப்பி வைத்தார். புதுக்கோட்டை உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து ஓய்வு பெற்ற என் தாத்தாவிடம் பல வருடங்களுக்குப் பின் அகப்பட்ட ஒரே மாணவன் வெகுண்டு! அதனால், அவன் பாடு படுதிண்டாட்டம் ஆயிற்று! என் தாத்தா சாதாரணமாகவே ஒரு விஷயத்தை 2 தடவை கூறுவார். படிப்பு சம்பந்தப்பட்டதை, 4 முறை அழுத்தமாகக் கூறுவார்! வெகுண்டு஢ சமாசாரத்தில், கற்றுக் கொடுக்க வேண்டிய ஒவ்வொன்றையும் 8 முறை சொல்லி, அதோடு நில்லாமல், அவனை 2 முறை திரும்ப கூறச்சொல்லி வாட்டி வறுத்தெடுத்து விட்டார்! "உன் தாத்தா கிட்ட டியூஷன் போணுன்றதை நினைச்சாலே வயத்தை கலக்கறதுரா" என்று அவன் புலம்பும்போது அவனைப் பார்க்க எனக்குப் பாவமாய் இருக்கும்! "நம்ம வாத்தியாரை விட என் தாத்தா எவ்வளவோ மேல் இல்லையா?" என்று நான் ஆறுதல் கூறுவேன்.

எங்களது வகுப்பு ஆசிரியரான திரு.ராமசாமி அய்யங்கார் கண்டிப்புக்கு பேர் போனவர். சிறுதவறு செய்தாலும் பிரம்பால் விளாசி விடுவார். நான் படிப்பில் கெட்டி, அதனால் அடி வாங்கும் பிரச்சினை இருந்ததில்லை. ஆனால், விதி ஒரு முறை வேறு ரூபத்தில் விளையாடி, அவரிடம் பிரம்படி பட வைத்ததை என்னவென்று சொல்ல?! காரணம்?

வேறு யார்? வெகுண்டு தான்! சுட்டுப் போட்டாலும் படிப்பேறாத அவனை ஓடவிட்டு நிதானமாகத் துரத்தி 'அந்தணன் இரக்கமில்லான்' என உரக்கச் சொல்லியபடி, ராமசாமி வாத்தியார் பிரம்படி வழங்குவது, வகுப்பறையில் வாடிக்கையாக நிகழும் ஒரு விஷயம் தான்! வெகுண்டுவும் லேசுப்பட்டவன் அல்லன். வாத்தியார் அடிப்பதற்கு முன்னமே, அவரை வெறுப்பேற்றும் வண்ணம், 'ஐயோ, இப்படி அடிக்கிறீங்களே, உயிர் போறதே, ஐயோ, கொல்றாறே!' என்று கூக்குரலிடத் தொடங்கி விடுவான். அச்சமயங்களில் வகுப்பிலுள்ள நானும் மற்ற மாணவர்களும் பீதி, பச்சாதாபம், சிரிப்பு போன்ற பல்வகை உணர்வுகளுக்கு ஆளாகி இஞ்சி தின்ற மந்திகள் போல் காட்சியளிப்போம்!?

வாத்தியார் ஒரு முறை வெகுண்டுவை ஏதோ ஒரு பாடத்தை மனப்பாடம் செய்து என்னிடம் ஒப்பிக்குமாறு கூறிச் சென்று விட்டார். அவனும் முயன்றான். ஆனால், அவனாவது ஒப்பிப்பதாவது!? என் கன்னத்தைத் தடவி கெஞ்ச ஆரம்பித்து விட்டான். நானும் கவசகுண்டலம் இல்லாத கர்ணனாக என்னை பாவித்துக் கொண்டு, செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முற்பட்டேன்!! வகுப்புக்குத் திரும்பி வந்த ஆசிரியரிடம் வெகுண்டு பாடத்தைப் படித்து அருமையாக ஒப்பித்து விட்டதாக பொய் உரைத்தேன். இதில் ஒரு தமாஷ் பாருங்கள்! 'பொய் உரைத்த வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பார்கள். நானோ வெகுண்டுவிடம் போஜனம் வாங்கி உண்டதால், பொய் சொல்லும் நிலைக்கு ஆளானேன்!

விதி தன் விளையாட்டை ஆரம்பித்தது! சதா சர்வ காலமும் என் கூற்றை நம்பும் ராமசாமி வாத்தியார், என்றும் இல்லாத் திருநாளாக அன்று, 'சரி, நீ படித்ததை மறுபடி என்னிடம் ஒரு தடவை கூறு, பார்க்கலாம்!' என்று அந்த திருவாழத்தானிடம் கேட்டார். எனக்கோ அஸ்தியில் ஜுரம் கண்டது. வெகுண்டு அபரிமிதமாக விழிக்கவே, வாத்தியார் என் பக்கம் திரும்பி, 'படிப்போடு பொய் உரைப்பதும் உனக்கு நன்று வருமோ??' என்ற விபரீத வினாவெழுப்பி சில பிரம்படிகளை எனக்குப் பரிசாக வழங்கினார்.

அதுவரை பிரம்படியே கண்டிராத எனக்கு, அந்த அடிகள் தந்த வலியில் சப்தநாடியும் ஒடுங்கிப் போயிற்று! இரண்டு நாள் காய்ச்சல் வேறு! காய்ச்சலின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது 'இனி வெகுண்டுவிடம் ஓசியில் வாங்கி உண்பதில்லை' என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டேன்! என்ன செய்வது? கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்! என் பள்ளி வாழ்க்கையில், நான் பட்ட முதலும் கடைசியுமான பிரம்படிகளைப் வாங்கித் தந்த பெருமை என்னருமை வெகுண்டுவுக்குத் தான்!

வெகுண்டுவை ராமசாமி வாத்தியார் அடுத்த வருடமும் 7-ஆம் வகுப்பில் உட்கார வைத்து விடுவார் என்று தான் நான் நினைத்தேன். ஆனால், அவன் தேர்ச்சி பெற்று என்னை அதிசயத்தில் ஆழ்த்தி விட்டான்! அடுத்த ஓரிரு வருடங்களில் அவன் தந்தையார் ஹோட்டலை மூடி விட்டார். அதன் தொடர்ச்சியாக வெகுண்டுவும் பள்ளியிலிருந்து விலகி அவன் குடும்பத்தார் வேறேதோ ஊருக்கு குடி பெயர்ந்து விட்டனர். ஹோட்டல் இருந்த இடத்தில் 'திருநெல்வேலி அல்வா ஹவுஸ்' என்ற போர்டு மாட்டிய இனிப்புக் கடை தோன்றியது. காலப்போக்கில் வெகுண்டுவைப் பற்றிய ஞாபகங்கள் என்னை விட்டு மெல்ல மெல்ல விலகி விட்டன. சிவாஜி பட வசனங்களும் பாடல்களும் கூடத் தான்!

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*


நாலைந்து வருடங்களுக்கு முன், ஒரு நவராத்திரி விடுமுறையில் என் மனைவி மகளுடன் மைசூரை சுற்றிப் பார்க்கச் சென்றிருந்தேன். மைசூரின் உலகப் பிரசத்தி பெற்ற தசரா ஊர்வலத்தை கண்டு ரசிக்க ஒரு ஜன சமுத்திரமே திரண்டிருந்தது. ஜம்பூ சவாரி என்றழைக்கப்படும் அவ்வூர்வலத்தில் பிரதான தளபதி முன்னே வர, தேவி சாமுண்டேஸ்வரியின் விக்ரகம் வைக்கப்பட்ட தங்க ஹௌடாவை முதுகில் சுமந்தபடி அழகாக அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட யானை ஒன்று பின்னே நடந்து வந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட மற்ற பட்டாடை உடுத்திய கம்பீர யானைகளும், குதிரை வீரர்களும், பாண்டு மற்றும் நாகஸ்வர வாத்தியக்காரர்களும், கலைக்குழுக்களும் வரிசையாக வந்த காட்சி பார்க்க மிக அற்புதமாக இருந்தது.

ஜம்பூ சவாரி முடிந்ததும், என் மனைவி 'அம்மு மத்யானம் ஒண்ணுமே சாப்பிடலை. வழியிலேயே எங்கேயாவது சாப்டுட்டு அப்றமா நம்ம ரூமுக்கு போயிடலாம்' என்றாள். ஏதோ ஒரு ஹோட்டலில் எதையோ சாப்பிட்டு விட்டு பில்லுக்கு பணம் தரும்போது, கல்லாவில் அமர்ந்திருந்தவர் என்னை ஒரு மாதிரி சந்தேகப் பார்வை பார்ப்பதை கவனித்து 'சார், நல்ல நோட்டு தான், கவலையே படாதீங்க!' என்றேன். அவர் இன்னும் சந்தேகம் விலகாமல், ஒருவித பிரமிப்புடன் 'சார், நீ ... நீங்கள் ஹிண்டு ஹைஸ்கூல் பாலாஜி தானே?! என்னைத் தெரியலையா? நான் தான் வெகுண்டு!' என்றார்(ன்)!?

என்னுடன் பள்ளியில் படித்த வெள்ளைக் குண்டன், அச்சமயம் சற்றே மெலிந்து கறுத்து முன்மண்டையில் பெருமளவு முடியும் இழந்திருந்ததால், என்னால் அவனை யாரென்று அறிய முடியாமல் போனது! வெகுண்டு கேட்ட அடுத்த கேள்வி,'ராமசாமி வாத்தியார் எப்படி இருக்கிறார்?'. வாத்தியார் பல ஆண்டுகளுக்கு முன்னரே வகுப்பில் பாடம் எடுக்கும்போதே மாரடைப்பால் இறந்து விட்டதை அவனிடம் சொல்ல எனக்கு மனம் வரவில்லை! அவனுக்காக ஒரு முறை வாத்தியாரிடம் பொய் சொல்லி பிரம்படி பட்டது என் நினைவில் நிழலாடியது! சிறுவயதில் இருந்தது போலவே, அச்சமயமும் சாப்பிட்டதற்கு பணம் வாங்க மறுத்து வெகுண்டு என்னை மேலும் கடன் பட்டவனாக ஆக்கி விட்டான்!

Published in Thinnai Nov 18 2004

என்றென்றும் அன்புடன்
பாலா

************************************************

இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:

Venkatesh R said...
Good Story Balaji.Vazhthukkal.

9:19 PM, November 20, 2004

enRenRum-anbudan.BALA said...
Comments from MARATHTHADI Group:

மரத்தடி விவாதங்களில் வெகுண்டு விடாமல் ஒரு கற்கண்டு கொடுத்திருக்கீங்க பாலாஜி
அன்புடன்
ரமேஷ் அப்பாதுரை


இது கதை மாதிரி தெரியலையே... முதற்கை அனுபவம் போல இருக்கே..
தப்பா நினைச்சுக்காதீங்க.. கலக்கிட்டீங்க... மிக நல்ல நேர்த்தியான
நடை.. எந்த விஷயமும் நல்லா இருக்குன்னா அதுல ஒரு நேர்மையும் அர்பணிப்பும்
இருக்கும். உங்க கதையில அது தெரியுது...

நீங்கள் நிறைய கதை எழுதியிருக்கீங்களா... (என்னா மறுபடியும்
கோவிச்சுக்காதீங்க... இந்த கதையில ஒரு குழந்தைத்தனம் தெரியுது...)

வாழ்த்துக்கள்... இன்னும் இது மாதிரி நிறைய விஷயதானம் செய்யுங்கள்..

அன்புடன்
ஸ்ரீகாந்த்.


பாலாஜி

சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

இது உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல் எழுதியிருக்கிறீர்கள்.
அப்படியென்றால் சிறந்த நடையில் சொல்லியிருக்கிறீர்கள்.
கற்பனை என்றால் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்

வாழ்த்துக்கள்.

நடராஜன்.


அன்பு பாலாஜி,

நீங்கள் சிறுகதை என்று தலைப்பிட்டு இருந்ததால், நானும் அதை சிறுகதை என்றே நம்பி படித்து முடித்தேன்.
:-)

ஆனால் சற்றே சிரமப்பட்டிருந்தால் இதை நல்லதொரு சிறுகதையாக்கியிருக்க முடியும் என்று தோன்றுகிறது.

இந்தக் கதையில் (?) நான் முக்கியமாக ரசித்தது அதிலிருந்த நகைச்சுவை அம்சத்தை. தமிழர்களிடம்
நகைச்சுவை உணர்வு தொலைந்து போய்விட்டதோ என்று எண்ணுமளவிற்கு இன்று பெரும்பாலான படைப்புகளில் தரமான
நகைச்சுவையை காண முடிவதில்லை. உங்கள் கதையைப்படிக்கும் போது நிறைய இடங்களில் மனமார சிரிக்க
முடிந்தது.

தொடர்ந்து எழுதுங்கள்.

சுரேஷ் கண்ணன்

10:57 PM, November 20, 2004

Anonymous said...
Balaji

I enjoyed your autograph. Just my thoughts also went back to days like that. I had a different Vehundu in my life.

Anbudan
S.Thirumalai

9:35 AM, November 21, 2004

dondu(#4800161) said...
மிக அருமையான வலைப்பூ. நீங்கள் குறிப்பிட்டுள்ள ராமசாமி ஐயங்கார் யார் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை 1962-க்குப் பிறகு நம் பள்ளியில் வேலைக்குச் சேர்ந்திருக்கலாம். நான் படித்தப் போது இருந்த ஆசிரியர்கள் உங்கள் காலத்தில் அனேகமாக எல்லோரும் ஓய்வுப் பெற்றுச் சென்றிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒரே ஒரு முறைதான் அடிவாங்கியிருக்கிறீர்களா? ரொம்ப அதிர்ஷ்டம் உங்களுக்கு. என் எல்லா வகுப்புகளிலும் முதல் ஐந்து மாணவர்களுக்குள் நான் இருந்து வந்தாலும் தினசரி ஒரு முறையாவது பெஞ்சு மேல் நின்றிருக்கிறேன் அல்லது அடி வாங்கியிருக்கிறேன் அல்லது வெளியே அனுப்பப் பட்டிருக்கிறேன் அல்லது .... விடுங்கள் அதைப் பற்றி இப்போது என்ன!

4:10 PM, November 21, 2004

Chandravathanaa said...
பாலா

உங்கள் பதிவு நன்றாக இருந்தது.
மிக நெருங்கிப் பழகியவர்களுடனான இப்படியான எதிர் பாராத சந்திப்புக்கள்
மறக்க முடியாத சுகங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

3:38 PM, November 22, 2004

enRenRum-anbudan.BALA said...
அன்பான நண்பர்களே,
உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
என்றென்றும் அன்புடன்,
பாலா

5:35 PM, November 22, 2004

Desikan said...
மிக அழகான சிறுகதை. இது போல் நிறைய எழுத என் வாழ்த்துக்கள்.
தேசிகன்

8:03 PM, November 22, 2004

அன்பு said...
ஒருநாளைக்கு 24 மணிநேரத்துக்கும் அதிகமாக தற்போது தேவைப்படுவதால் வலைப்பதிவு பக்கம் வர இயலவில்லை. இன்று ஏதோ ஒன்று உங்களின் இந்த பக்கத்துக்கு இழுத்துவந்து விட்டது.

இந்த பதிவு முடியும்வரை இதை உங்களின் நினைவலைகள் என்றுதான் படித்துவந்தேன். பின்னூட்டங்களை பார்த்தபிறகுதான் இது கதை என்று தெரிய வந்தது. இது எதுவாக இருந்தாலும் இனிமையாக, சிறப்பாக இருந்தது. நன்றி.

வெகுண்டுவை படிப்பில் மக்கு என்று கூற இயலாது. 'மஹாமக்கு' என்று தான் சொல்ல வேண்டும். ஏனோ தெரியவில்லை. சரஸ்வதி தேவி தன் கடாட்சத்தை அவன் பக்கம் திருப்ப மறந்தே போனாள். அவனை 'வெகுண்டு'

என் தாத்தா சாதாரணமாகவே ஒரு விஷயத்தை 2 தடவை கூறுவார். படிப்பு சம்பந்தப்பட்டதை, 4 முறை அழுத்தமாகக் கூறுவார்!

'பொய் உரைத்த வாய்க்கு போஜனம் கிடைக்காது' என்பார்கள். நானோ வெகுண்டுவிடம் போஜனம் வாங்கி உண்டதால், பொய் சொல்லும் நிலைக்கு ஆளானேன்! இந்த வரிகளெல்லாம் சுஜாதா சாருக்கேயுரிய லொள்ளு பாஷை, அது உங்களுக்கும் கூடி வருகிறத. மிகவும் ரசித்து சிரித்தேன்.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

9:07 AM, November 24, 2004

enRenRum-anbudan.BALA said...
அன்பு,
உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒரு முறை, ஒரு பின்னூட்டத்தில் நீங்கள் தேசிகனிடம், என்னுடைய ஒரு பதிவை எப்படி சிறுகதையாக மாற்றுவது என்று கேட்டிருந்தீர்கள்!!! அந்த விஷயத்தை ஒரு உந்துதலாகக் கொண்டு கஷ்டப்பட்டு, நீங்கள் இஷ்டப்படும் வகையில் கதை என்று ஒன்றை எழுதி பதிப்பித்தேன். வாழ்த்துக்களுக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா

8:42 PM, November 24, 2004
**************************************

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star22b. சன் டிவியின் பக்தித் தொடர் - 'ராஜ ராஜேஸ்வரி' *மீள்பதிவு*

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

நான் பொதுவாக இது போன்ற பக்திப் பரவசமும், மாயமந்திரமும் நிறைந்த தொடர்களை பார்ப்பது கிடையாது. நேற்று (30-1-2005) இரவு பொழுது போகாமல், என் மகள்களுடன் அமர்ந்து 'ராஜ ராஜேஸ்வரி' தொடரைப் பார்த்தேன். இதை விட சிறப்பாய் மக்களை முட்டாளாக்க முடியாது என தோன்றுமளவுக்கு, பக்தி உணர்வை காமெடி ஆக்கும் வகையில், பல 'திடுக்' காட்சிகள் கொண்ட சூப்பரான ஒரு தொடர் இது! பகுத்தறிவுப் பாசறையிலிருந்து உதயமானவர்கள்(!), இது போன்ற மூட நம்பிக்கைகளை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுவது தான், கேலிக்கூத்தின் உச்சக்கட்டம்! வியாபார நோக்கு அவசியம் தான். ஆனால், நம்பத்தகாத வகைக் காட்சிகளை, உலகம் முழுதும் பார்க்கும் டிவியில், வரையறை இல்லாமல் வாராவாரம் ஒளிபரப்பி இலாபம் ஈட்ட வேண்டுமா என்பதே கேள்வி!

இத்தொடரை பார்ப்பதன் விளைவாக என் மகள்கள் பக்தி நிறைந்தவர்களாக ஆகிறார்களோ இல்லையோ, சீக்கிரமே 'Missile Technology' பற்றி சந்தேகங்களை கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்! நேற்று இத்தொடரில், நீலி என்ற நல்ல ஆவிக்கும், மாயச்சாமி மற்றும் வள்ளி என்ற இரண்டு தீயவர்களுக்கும் (கெட்டவரில் ஒருவர் ஆண், ஒருவர் பெண் --- இதிலெல்லாம் நன்றாக சமத்துவம் காட்டுவார்கள்!) இடையே நடக்கும் மந்திர, தந்திர போராட்டத்தை விலாவாரியாக காண்பித்தார்கள். இப்போராட்டமே, ஆவியின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோயிலில் இருந்து ராஜியை (தொடரின் கதாநாயகி) மண்ணெடுக்க விடாமல் (எதற்கு என்று எனக்குத் தெரியாது? வீடு கட்டுவதற்காக இருக்கலாம்! ) தடுப்பதற்காகத் தான்!


வில்லன்கள் இருவரும் அக்னி வளர்த்து, ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி, தங்கள் கைகளால் தலையை இடமும் வலமுமாக சுற்றி கோணங்கித்தனம் செய்தவுடன், ஒரு லேசர் வகை ஆயுதம் அக்னியிலிருந்து புறப்பட்டு, வானை நோக்கி சீறிப் பாய்கிறது!!! சாதாரணமாக வாய் ஓயாமல் பேசும் என் இரண்டாவது மகளிடமிருந்து (3 வயது) அடுத்த 20 நிமிடங்கள் பேச்சே இல்லை! அந்த ஏவுகணை கிளம்பிய மறுகணமே அதை உணர்ந்து விடும் நீலி ஆவி (நடிகை கீர்த்தனா!) குழந்தைகள் அலறும் வண்ணம் பயங்கரமாக 'பேய்' முழி முழித்து, தனது உள்ளங்கையிலிருந்து வெளிப்படும் ஓளியினால் கோயிலுக்கு (கோபுரத்தையும் சேர்த்து!) ஒரு Electromagnetic தடுப்பு வலையை உண்டாக்குகிறது. 'கொடியவர்களின் கூடாரத்தில்' உதித்த ஏவுகணை அத்தடுப்பு வலையில் மோதிப் பார்த்து சலித்து திரும்பி எங்கோ போய்விடுகிறது!

தீயவர்கள் இன்னொரு ஆயுதம் நெருப்பிலிருந்து தயாரித்து ஏவுகிறார்கள்! நீலி ஆவி பதில் ஆயுதம் உருவாக்கி அதை பஸ்பம் ஆக்குகிறது. அடுத்து, இருவரது சக்தியையும் ஒருங்கிணைத்து ஒரு கொடிய மிருக வடிவ லேசர் பொம்மையை உருவாக்கி, இம்முறை நீலியையே அழிக்க அனுப்புகிறார்கள்! என் மகள்கள் "அப்பா, நீலி செத்துடுவாளா?" எனக் கேட்டனர், நீலி ஏற்கனவே செத்த ஓர் ஆவி என்பதை உணராமல்! நானும் 'நீலி காலி' என்று தான் நினைத்தேன்! ஆனால் நீண்ட கூந்தல் கொண்ட நீலி ஆவியோ
"உனக்கும் பெப்பே, உன் பாட்டனுக்கும் பெப்பே!" என்ற வகையில், அந்த தாக்குதலையும் முறியடித்து ஒரு இடிச்சிரிப்பு சிரித்தது பாருங்கள், எனக்கே கதி கலங்கி விட்டது!! என் மகள்களோ பயமின்றி ரசித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் தான் வாராவாரம் பிசாசையும், பூதத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!!!

அதற்கடுத்து, நீலி ஆவி நேராக கொடியவர்கள் முன் அகாலமாகத் தோன்றி, தாக்குதலை நிறுத்துமாறு அவர்களை எச்சரிக்க, அதை மதிக்காமல் திமிராகப் பேசும் இருவரையும், 'டொய்ங்' என்ற சத்தத்துடன், காணாமல் போக வைக்கிறது! அடுத்த வாரம் மாயச்சாமியும், வள்ளியும் மறுபடியும் உயிர் பெற்று விடுவார்கள் என்று என் மூத்த மகள் அடித்துக் கூறினாள்! இது போன்று பல சீரியல்கள் அவள் பார்த்ததால் விளைந்த ஞானத்தின் பயன்!!! அதே சமயம் கோயிலில், நான் மேலே குறிப்பிட்ட தொடரின் கதாநாயகி ராஜி, பக்திப் பரவசத்துடன், கண்ணில் நீர் மல்க, கோயிலில் எந்த இடத்தில் மண் எடுத்தால் நல்லது என்றுரைக்குமாறு கருப்புசாமியிடம் கோரிக்கை விடுக்கிறாள். இத்தொடரில் முணுக்கென்றால் கேட்டவரின் முன் பிரத்யட்சம் ஆகும் தெய்வம், இம்முறை (for a change) ராஜி முன் தோன்றாமல், கருப்புசாமியின் அருவாள் பதித்த இடத்தைச் சுற்றி ஒரு லேசர் ஒளி வட்டம் இட்டு, அவ்விடத்திலிருந்து மண் எடுக்குமாறு ஸிம்பாலிக்காக உணர்த்துகிறது!!! ராஜி மண்ணை எடுத்து ஒரு குடத்தில் இட, இதற்கு மேல் சீரியலைப் பார்த்தால் எனக்குள்ள தெய்வ பக்தியும் போய், புத்தியும் பேதலிக்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்த நான், வீட்டை விட்டு 'எஸ்கேப்' ஆனேன்!!!!!!

இத்தொடரின் காட்சிகளில் தெரியும் தொழில்நுட்பம், அந்தக் காலத்து மகாபாரதத் தொடரில் வருவது போல் இல்லாமல் (ஒரு டிவித்தொடர் லெவலுக்கு) much better எனத் தோன்றியது. ஆனாலும், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்றவர்கள், கற்கால டைனாசர்களை நம் முன் கொணர்ந்து நிறுத்த தற்கால தொழில்நுட்பத்தை பயன்படுத்த, நாம் என்ன செய்கிறோம் பாருங்கள்! தொழில்நுட்பத்தை கேலிக்கூத்துக்கு துணையழைக்கிறோம்!
ராஜ ராஜேஸ்வரியே துணை!

'பிச்சைப்பாத்திரம்' சுரேஷ் கண்ணன் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ராஜி - டகிள்பாஜி

(சுரேஷ் கண்ணன் 'ஏய்' திரைப்படத்தை விமர்சித்து எழுதிய தனது ஒரு பதிவில், "ஏய் - ஒரு ஆய்" என்று முத்தாய்ப்பாக ஒரு வரியுடன் பதிவை முடித்திருந்தார் :))

என்றென்றும் அன்புடன்,
பாலா

***********************
இப்பதிவுக்கு அப்போது வந்த பின்னூட்டங்கள்:


Suba said...
இந்த தொடர் மாத்திரமல்ல, பொதுவாகவே தமிழக சின்னதிரைத் தொடர்களில் பக்தி மயத்தை உணர்த்தும் வகையில் வெளிவருபவை எல்லாமே இதே மாதிரிதான். பார்ப்பவர்களை முட்டாளாகவும் சமயத்தை மாந்திரீகம் சார்ந்ததாகவும் காட்டுவதிலேயே கவனத்தைக் காட்டுகின்றனர். இது சமயத்தை வளர்ப்பதற்காக வெளிவருபவையாக எனக்குப் படவில்லை. மாறாக சமயத்தையும் தத்துவங்களையும் கீழ்மைப்படுத்திக் காட்டும் முயற்சியாகத் தான் எனக்குப் படுகின்றது. ஜெர்மனியிலும் சன், K, ஜெயா ராஜ் டிவிகள் உலவுவதால் அவ்வப்போது இந்தத் தொடர்களைப் பார்த்து நானும் பயப்படுவதுண்டு..!

10:48 PM, January 31, 2005

பினாத்தல் சுரேஷ் said...
Bala,

Sun TV is doing a wonderful job of spreading Periyar's atheist preachings through these serials! Sure -- at least 10% of the audience would have turned "nathigargal" by now.

9:23 AM, February 01, 2005

இளவஞ்சி said...
Technology-ய் உபயோகித்து ஸ்பீல்பர்க் டினாசோர் மட்டுமா காட்டினார்? indiana jones ல் இல்லாத மாயாஜால காட்சிகளா? இப்போகூட vanheil raising என்ற ஆங்கில பேய் படம் வந்ததே... ராஜராஜேஸ்வரியெல்லாம் ஒன்றுமேயில்லை...
அறிவாளிகள் வேண்டியதை தேடிக்கொள்கிறார்கள். நம்மைப்போன்ற கிடைத்ததை அனுபவிக்கும் சராசரிகளுக்கு எல்லா ஊரிலும் ஒரே சரக்குதான்.. பாட்டிலு தான் வெற..

4:23 PM, February 01, 2005

enRenRum-anbudan.BALA said...
இளவஞ்சி,

கருத்துக்களுக்கு நன்றி! ஆனால், சத்தியமாக, ஸ்பீல்பெர்க் காட்டியவைகளையும், சன்டிவியின் மாயாஜாலக் காட்சிகளையும் equate செய்வதை ஒப்புக் கொள்ள இயலாது :-)

எல்லாரும் திரைப்படங்களையே விமர்சனம் செய்கிறார்களே என்று ஒரு மாறுதலுக்காக ஒரு டிவித் தொடரை பற்றி விமர்சனம் செய்ய, என் பாணியில்(!) முயன்றேன்! அவ்வளவே.

என்றென்றும் அன்புடன்
பாலா

5:20 PM, February 01, 2005

வசந்தன்(Vasanthan) said...
அவர்கள் தான் வாராவாரம் பிசாசையும்இ பூதத்தையும் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!!!
டிவியில் பார்ப்பதென்ன சேர்ந்தே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பின்னே எப்படிப் பயப்படுவார்கள். (புரிஞ்சுதா)

11:05 AM, February 15, 2005

Anonymous said...
வசந்தன்,

இது கூடப் புரியாத 'கொய்யான்' இல்லை நான் :-)

இருந்தாலும், இது கொஞ்சம் TOO MUCH இல்ல???

என்றென்றும் அன்புடன்,
பாலா


1:40 PM, February 15, 2005

வசந்தன்(Vasanthan) said...
கோவப்பட மாட்டியள் எண்டு நினைக்கிறன்.

6:07 PM, February 15, 2005

காஞ்சி பிலிம்ஸ் said...
பகுத்தறிவு பாசயறையா? அப்படி என்றால் என்ன? கருணாநிதிக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இருப்பதாக யார் சொன்னது? பெண்களின் கற்பை போற்றிய திருவள்ளுவரையே தாக்கிய பெரியார் எங்கே? பெண் அடிமைச் சின்னத்தின் முழு உருவமாகிய கண்ணகிக்கு சிலை வைத்து திருக்குறளில் உள்ள கற்பியலுக்கும் சேர்த்து குறளோவியம் படைத்து காசாக்கிய கருணாநிதி எங்கே. சந்தர்ப்ப வாத அரசியல் செய்து மதவாத பா.ஜா.காவுடன் கைகோர்த்த கருணாநிதியை இனி ஒரு முறை பகுத்தறிவாளர் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். பகுத்தறிவும் ஹிந்தி எதிர்ப்பும் தமிழ்நாட்டு முன்டங்களுக்கு மட்டுமெ சொல்லி, தனக்கும் தன் குடும்பத்துக்கும் அவைகளை விதிவிலக்காக்கியதை தமிழ்நாடு உணர்ந்து பல நாட்களாகிவிட்டது நன்பரே!

10:03 PM, February 15, 2005

Anonymous said...
Nice satire ...

12:50 AM, August 16, 2006
**********************
எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Saturday, December 08, 2007

Star22a. GCT தோழனுக்கு ஒரு மடல்! (மீள்பதிவு)

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

எனது GCT கல்லூரி குறித்த "மலரும் நினைவுகளை" என் ப்ரியத்துக்குரிய, நான் மிகவும் மதித்த, நண்பனான ப்ரீதமுக்கு (4 பதிவுகளாக) எழுதிய கடித வடிவில் பகிர்ந்து கொண்டுள்ளேன் ! நான் எழுதிய 'நாஸ்டால்ஜியா' பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை இத்தொடர் பதிவுகள்! உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன் !

இவற்றை வாசித்த பின், உங்கள் கல்லூரி நாட்கள் குறித்த Nostalgic நினைவலைகளில் நீங்கள் மூழ்கி நீந்த வேண்டும் என்பது தான் எனது நோக்கம்! ஏதாவது ஒரு வகையில், வாசகர்களாகிய உங்களது மெல்லிய உணர்வுகளில் ஒரு சிறிய அதிர்வை, இந்த வாசிப்பு ஏற்படுத்தக் கூடும் என்று நினைக்கிறேன் !

வரிசைக் கிரமமாக வாசிக்கவும். பின்னூட்டம் இட விரும்பினால், அந்தந்தப் பதிவுகளில் பின்னூட்டம் இடவும். இப்பதிவில் இட வேண்டாம்! நன்றி.

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 1

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 2

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 3

GCT தோழனுக்கு ஒரு மடல் - பாகம் 4


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

Star22. சுஜாதாவின் TEN COMMANDMENTS

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

இது "குமுதம்" பத்திரிக்கையில் சுமார்12 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது
----------------------------------------------------------

சுஜாதாவின் 'வயது வந்தவர்களுக்கு' ....

உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது.

பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள். அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதாமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட் தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது ஒரு நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.

3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளியே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமை என்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம் தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.

6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.

10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.


நன்றி: குமுதம் & தேசிகன்

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Star 21. வடக்கு நோக்கி என் முதல் பயணம் - A Tale of Twists

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

பொறியியற் படிப்பு முடித்தவுடன், பெங்களூரில் பணி புரிந்து வந்தேன். அப்போது ONGC நிறுவனத்திலிருந்து வேலைக்கான நேர்முக அழைப்பு என் சென்னை முகவரிக்கு வந்தது, அதற்கான எழுத்துத் தேர்வு நடந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு! நான் பெங்களூரில் நல்ல வேலையில் இருந்ததால், மும்பை / டில்லி போன்ற இடங்களுக்கு பணி நிமித்தம் செல்வதில் என் அன்னைக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. நேர்முகத் தேர்வோ டேராதூன் (Dehradun) என்ற இடத்தில். இது நடந்தது 1987 ஜனவரியில்.

எனக்கு நேர்முகத் தேர்வுக்கான கடிதம் வந்திருக்கிற விஷயம் கடைசி நிமிடத்தில் தான் எனக்குத் தெரிய வந்தது. அது கூட, என் சித்தி என் அன்னையிடம், 'ஒரு தேர்வுக்கோ அல்லது வேலைக்கோ செல்லலாமா/வேண்டாமா என்பதை உன் மகனே முடிவு செய்வது தான் சரியாக இருக்கும். இப்போது இதை நீ மறைத்து விட்டு, பின்னால் தெரிய வந்தால் அவன் ரொம்ப வருத்தப் படுவான். ONGC ஒரு பெரிய கம்பெனி, அவனுக்கு ·போன் போட்டு சொல்லி விடு' என்றெல்லாம் அறிவுறுத்திய பிறகு.

புதிதாக வேலையில் சேர்ந்திருந்த நான், என் மேலாளரிடம் கெஞ்சிக் கூத்தாடி லீவு பெற்று, பெங்களூரிலிருந்து சென்னைக்கு விரைந்தேன். அன்றிரவே தில்லிக்கு ரயில் பிடித்தால் தான் நேர்முகத் தேர்வுக்கு செல்ல முடியும் என்ற சூழ்நிலை! நான் அது வரை வடக்குப் பக்கம் தலை வைத்து படுத்தது கூட கிடையாது. என் உறவினர் ஒருவர் மூலம் எமெர்ஜன்ஸி கோட்டாவில் டிக்கெட் வாங்கி (இதற்காக அலையோ அலை என்று காலையிலிருந்து மதியம் வரை அலைந்தேன்!), என் ஒன்று விட்ட சகோதரன் ஒருவனின் தில்லி முகவரியை கஷ்டப்பட்டு கண்டுபிடித்து, அவனுக்கு நான் டில்லி வருவதாக ஒரு டெலிகிராம் கொடுத்து விட்டு மாலை தான் வீட்டுக்கு வந்தேன். அரக்க பரக்க தேவையானவற்றை ஒரு பெட்டியில் அடைத்துக் கொண்டு, கடவுளை வணங்கி விட்டு இரயில் நிலையத்திற்குப் புறப்பட்டேன். என் அம்மாவின் முகத்தில் கவலை ரேகைகள் தெரிந்ததைப் பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை!!!

கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் பயணம், இரயிலில் ஏறி அடுத்த நாள் இரவு வரை ஜாலியாகவே அமைந்தது. ஒரு தூத்துக்குடி காங்கிரஸ்காரர், ஒரு மிலிட்டரிக்காரர், இரு இளைஞர்கள் ஆகியோருடன் அரட்டை அடித்தபடி பொழுது இனிமையாகவே கழிந்தது. முன்னிரவிலிருந்து (ஆக்ரா நெருங்குவதற்கு முன்பாகவே!) குளிர் நடுக்கத் தொடங்கியது ! ஸ்வெட்டரும் இல்லாமல், சரியான போர்வையும் இல்லாமல் உடம்பு ஒரு மாதிரி விறைத்து விட்டது ! பொட்டுத் தூக்கம் இல்லை; இரயில் நிறுத்தங்களிலெல்லாம், மண் கோப்பைகளில் கிடைத்த சூடான தேநீர் அருந்தினேன். வாழ்க்கையில் நான் சந்தித்த முதல் கடுங்குளிரின் தாக்கம் மறக்கவே முடியாதது !!!

என் சகோதரன் தில்லி இரயில் நிலையத்திற்கு வரவேண்டுமே என்ற ஓர் எண்ணம் தான் மனது முழுவதும். வரவில்லையென்றால், அவன் முகவரி தேடி குளிரில் அலைய வேண்டுமே என்ற கவலை வேறு. என் நல்ல நேரம், இரயில் நிலையம் வந்திருந்த அவன், சிரித்தபடி ஸ்வெட்டர் ஒன்றைத் தந்து, "நீ எடுத்து வரமாட்டாய் என்று எனக்குத் தெரியுமே!" என்றான். அதை அணிந்தபின் தான், பற்களின் ஆட்டம் நின்று, பேச்சே வந்தது !!! அடுத்த நாள் நேர்முகத் தேர்வு என்பதால், அன்று மாலையே டேராதூனுக்கு பேருந்தில் பயணம் மேற்கொண்டேன்.

அச்சமயம், கல்லூரி நண்பன் ஒருவன் டேராதூனில் அவனது நிறுவன பயிற்சிக்காகத் தங்கியிருந்தான். அவன் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து சென்றபோது, அவன் ஊர் சுற்றப் போயிருந்தான். திபெத்தியன் சந்தையை ஒரு ரவுண்ட் அடித்து, ஒரு நல்ல ஸ்வெட்டரை வாங்கிக் கொண்டு, அவனுக்காகக் காத்திருந்து அந்த திருவாழத்தானை இரவு பத்தரை மணிக்குத் தான் பார்க்க முடிந்தது. அது அவன் நிறுவன விடுதி என்பதால், இரவு நான் அங்கே தங்க இயலாது என்று கவுத்து விட்டான். நண்பன் கொஞ்சம் மப்பில் இருந்தாலும், என்னுடன் வந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்து ஏதோ ஒரு பாடாவதி லாட்ஜில் நான் தங்க ஏற்பாடு செய்து விட்டுப் போய் விட்டான்.

எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியில் லாட்ஜ் மேற்பார்வையாளரிடம் என்னை காலை ஆறரை மணிக்கு (எட்டு மணிக்கு நேர்முகத் தேர்வு) எழுப்புமாறு கூறிவிட்டு உறங்கச் சென்றேன். காலையில் விழிப்பு வந்து மணி பார்த்தால், ஏழு ஐம்பதைக் காட்டியது ! என் ஹிந்தி அறிவை நொந்தபடி, பல் மட்டும் துலக்கி விட்டு, ஓர் ஆட்டோ பிடித்து தேல்பவன் (ONGCயின் தலைமை அலுவலகம்) நோக்கி விரைந்தேன்!

**********************************************
ஆட்டோவுக்கு பணம் கொடுக்கும்பொது தான், தங்கிய லாட்ஜின் பெயரையோ, அது இருந்த இடத்தின் பெயரையோ கவனிக்கத் தவறியது சுள்ளென்று உரைத்தது. என்னுடைய பெட்டியை அந்த லாட்ஜின் அறையில் விட்டு வந்திருக்கிறேனே ? ஆட்டோக்காரரின் கையைத் தடவி, "முஜே, அபி ஆயா, ஹைனா, கிதர்ஸே ?" என்றவுடன் அவர் பார்த்த பார்வையே, 'என்ன மாதிரி கிறுக்கன்டா இவன் ? இவன் எங்கேயிருந்து வந்தான்னு நம்மை ஏன் கேக்கறான் !' என்றது. நான் விடாமல், மறுபடியும், "பாய்சாப், ஹமாரா ஹோட்டல் கா நாம் க்யா ஹை ?" என்றவுடன், 'நான் சற்று மரை கழண்ட கேஸோ' என்ற அவருக்கிருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய் விட்டது ! "முஜே கோயி ஹோட்டல் கா நாம் நஹி மாலும், சம்ஜா ?" என்று கடுப்பினார் ! ஒரு பத்து நிமிடங்கள் போராடி, நான் என்ன கேட்கிறேன் என்று புரிய வைத்து (அல்லது அவருக்கு புரிந்து!) 'ஐயோ பாவமே ! இதைக் கேட்கவா இவ்வளவு சிரமப்பட்டாய் ?' என்பது போல் கனிவாகப் பார்த்து, நான் தங்கியிருந்த லாட்ஜின் பெயரைக் கூறினார். லாட்ஜின் பெயரைக் குறித்துக் கொண்டு, அவருக்கு சுக்ரியா சொல்லி, ஆனந்தக் கண்ணீர் விட்டேன் ! (இப்ப சொல்லுங்க, ஹிந்தி தெரிஞ்சா நல்லது தானே :))

நல்ல வேளை, தேர்வுக்கு வந்தவர்களின் பட்டியலில் எனக்கு முன் பலர் இருந்ததனால், என் முறை வர மதியம் ஆனது. தேர்வுக்கு வந்திருந்த ரூர்க்கி பல்கலைக்கழகத்தில் பயின்ற ஒரு பெண்ணுடன் 'கடலை' போட்டு விட்டு , நேர்முகத் தேர்வை சிறப்பாகவே எதிர்கொண்டு, புதுத் தோழிக்கு பிரியா விடை கொடுத்து விட்டு, மாலை லாட்ஜுக்கு வந்து பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி, தில்லிக்கு எந்த மார்க்கமாகப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, மற்றொரு கல்லூரி நண்பன் அதிசயமாக கண்ணில் பட்டான். அவனும் ஏதோ வேலை விஷயமாகத் தான் டேராதூன் வந்திருந்தான். இருவருக்குமே தில்லி பயணத்திற்கு, துணைக்கு ஆள் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி. மகிழ்ச்சியைக் கொண்டாடவும், இரவுக்குளிரை எதிர்கொள்ளவும் உற்சாக பானம் ! தில்லி செல்லும் இரவு இரயிலில் ஏறி, அரட்டை அடித்தபடி ஜாலியாகப் பொழுதைக் கழித்தோம் !

அடுத்த நாள், தில்லியை அடைந்து அன்று முழுதும் (இரவு இரயிலில் சென்னை கிளம்பும் வரை) தில்லியை சுற்றிப் பார்க்கலாம் என்ற முடிவு செய்து, பிரகதி மைதான் பக்கம் திரிந்து கொண்டிருந்தபோது, கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் சந்தித்த தூத்துக்குடி காங்கிரஸ்காரர் என்னைப் பார்த்து விட்டார். "தம்பி, வாங்க, வாங்க, போயிட்டே பேசுவோம்" என்று என்னைக் கூட்டிக் கொண்டு ஆட்டோவில் பயணப்பட்டார். "தேர்வில நல்லா பண்ணீகளா ?" என்று அன்பாக வினவினார். "இப்போ ஒருத்தரை ஒங்களுக்கு அறிமுகம் செஞ்சு வைக்கிறேன், பாருங்க!" என்று புதிர் போட்டபடி, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, திரு.G.K.மூப்பனார் முன் நிறுத்தி விட்டார் !!! மூப்பனார் அவர்கள் சக்தி வாய்ந்த ஒரு காங்கிரஸ் தலைவராக இருந்த காலம் அது.

மூப்பனார் அவர்கள், தூத்துக்குடிக்காரரிடம் சற்று நேரம் பேசி விட்டு, 'பையன் யாரு ?' என்று வினவ, இவர். "தெரிஞ்ச புள்ளைங்க ! என்ஜினியரிங் முடிச்சுட்டு, ONGC-லே இன்டர்வியூக்காக வந்திருக்காப்ல" என்றவுடன், மூப்பனார் இரண்டொரு வார்த்தைகள் என்னிடம் பேசிவிட்டு, இருவருக்கும் விடை கொடுத்தார். அது தான், நான் மூப்பனாரை என் வாழ்வில், முதலும் கடைசியுமாக நேரில் பார்த்தது.

அன்று, குடியரசு தின ஊர்வலத்தின் ஒத்திகையை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்றிரவே, அதே கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொண்டு, ஒரு வழியாக சென்னையின் வெப்பத்திடம் மீண்டும் தஞ்சம் அடைந்தேன்! அதன் பிறகு, என் வாழ்வில் பல இடங்களுக்கு (உள்நாடு/வெளிநாடு என்று) பயணம் மேற்கொண்டிருந்தாலும், நான் most exciting trip என்று கருதுவது, 'பயமறியா இளங்கன்றாக' நான் மேற்கொண்ட இந்த டில்லி/டேராதூன் பயணத்தை தான்! என் வாழ்வின் மறக்கவே முடியாத பிரயாணமும் கூட !!!


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
என்றென்றும் அன்புடன்
பாலா

Star20. பல்லவியும் சரணமும் - I I - 15

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

இன்னும் சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், திரைப்படத்தையும் கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே! 'பழைய பாடல் Blogger புலிகள்' தான் பல உலவுகின்றனவே!

போட்டியில் கலந்து கொள்ள அனுமதி இலவசம் :-))

ஒரு வேண்டுகோள்:
தயவு செய்து, இப்பதிவுக்கான பின்னூட்டங்களை பார்க்காமல், பல்லவியை கண்டுபிடிக்க முயற்சி செய்யவும் !


1. தங்கப்பாவை அங்கங்கள் உங்கள் சொந்தங்கள்

2. அஞ்சிடும் வஞ்சி இடை, கெஞ்சிடும் பிஞ்சு நடை

3. அவள் சோலைக்குயில் பாடுவதை சொல்லாமச் சொல்லி ...

4. கெஞ்சுவதும், கொஞ்சுவதும் வஞ்சியரின் சீதனமே

5. பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

6. உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான் இருவரில் கணக்கிலும் வரவு வைத்தான்

7. அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன் அந்த ஒருவன் பெயர் தான் இறைவன்

8. வசந்த கால தேரில் வந்து வாழ்த்து கூறும் தென்றலே

9. முத்துத் தமிழ் பாடும் பூங்குயில் முத்தம் ஒன்று வேண்டும் ஆண்குயில்

10. நெஞ்சம் ஒருவன் சொந்தம் என்றாள் தேவி எங்கள் மீனாட்சி

11. பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை நான் தேடி வந்த மாப்பிள்ளை


எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

Friday, December 07, 2007

Star19. தமிழ் சினிமாவை கலக்கிய "காதல் மன்னன்"

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

ஜெமினி கணேசன் அவர்கள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் காலமானபோது எழுத வேண்டும் என்று நினைத்து தவறிப்போன பதிவு இது! மிஸ்ஸியம்மா முதல் அவ்வை சண்முகி வரை தனக்கென வளர்த்துக் கொண்ட ஒரு பாணியை வைத்து, ஜெமினி தமிழ் சினிமாவில் முத்திரை பதித்தவர். அவர் ஏற்று நடித்த மென்மையான (காதல்!) வேடங்களுக்கு, அவருக்கே உரிய ஸ்டைலில் மெருகேற்றி தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அழியாத் தடங்களைப் பதித்தவர் "காதல் மன்னன்" என்றால் அது மிகையில்லை! பேசும்படம் என்ற சினிமா இதழ் தான், ஜெமினி கணேசனுக்கு 'காதல் மன்னன்' என்ற பட்டம் வழங்கியது!

Photo Sharing and Video Hosting at Photobucket
அவர் இறப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன் பிலிம்·பேர் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருது மும்பையில் வழங்கியபோது, அவையினர் அனைவரும் எழுந்து நின்று கௌரவித்தது நினைவுக்கு வருகிறது. இத்தனைக்கும் ஜெமினி பிறமொழித் திரைப்படங்களில் அதிகம் நடித்திராதவர். பத்மஸ்ரீ விருது பெற்ற சாதனையாளரும் கூட.

தமிழ் சினிமாவின் பொற்காலத்தில், எம்ஜியார் சிவாஜிக்கு அடுத்து மூன்றாவது பெரிய நடிகராக வலம் வந்த ஜெமினி, எம்ஜியார் சிவாஜியைப் போல 'நாடக மேடை' வாயிலாக சினிமாவுக்கு வந்தவர் அல்லர். அதனால், நாடக நடிப்பின் பாதிப்பு அவரிடம் காணப்படவில்லை. பொதுவாக, ஜெமினி மென்மையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்ததால், திரைப்பட வட்டாரத்தில் அவருக்கு "சாம்பார்" என்ற செல்லப்பெயர் நிலவியது :)



Photo Sharing and Video Hosting at Photobucket

மெல்லிய காதல், இழையோடும் சோகம், பாசம், நுட்பமான நகைச்சுவை / வில்லத்தனம், முதிர்ச்சியின் மிடுக்கு, சரித்திர வீரம் என்று உணர்வுகளை வெளிக்கொணர்ந்த பலவகை கதாபாத்திரங்களில், மிகை நடிப்பு துளியும் இன்றி பரிமளித்தவர் நமது காதல் மன்னன்! ஜெமினி 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அவற்றில் மிக சிறப்பானவற்றை மட்டும் குறிப்பிடுகிறேன், 'நாஸ்டால்ஜிக்' பயணம் மேற்கொள்ள விரும்பும் வாசகர்களுக்காக :)

1. மனம் போல் மாங்கல்யம் (1953, கதாநாயகனாக முதல் படம்)
2. கணவனே கண் கண்ட தெய்வம் (1955)
3. மிஸ்ஸியம்மா (1955)
4. மாதர் குல மாணிக்கம் (1956)
5. மாயா பஜார் (1957)
6. வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958)
7. கல்யாணப் பரிசு (1959)
8. களத்தூர் கண்ணம்மா (1960)
9. தேன் நிலவு (1961, "பாட்டுப் பாடவா?" வை மறக்கத் தான் முடியுமா?)
10. கொஞ்சும் சலங்கை (1962)
11. சுமை தாங்கி (1962)
12. கற்பகம் (1963)
13. பணமா பாசமா (1968)
14. இரு கோடுகள் (1969)
15. பூவா தலையா (1969)
16. நான் அவனில்லை (1974)

ராமசாமி கணேசன் என்ற இயற்பெயர் கொண்ட ஜெமினி, 1940-களில் ஜெமினி ஸ்டூடியோவில் ஒரு 'கதாபாத்திர தேர்வாளராக'த் (casting assistant) தான் தன் திரை வாழ்க்கையைத் தொடங்கினார். 1947-இல் வெளிவந்த மிஸ்.மாலினி திரைப்படத்தில் ஒரு சிறிய வேடம், பின் 'சக்ரதாரி'யில் கிருஷ்ணர் வேடம் என்று நடிக்க ஆரம்பித்த R.கணேசன், R.S.மனோகர் கதாநாயகனாக நடித்த 'தாய் உள்ளம்' திரைப்படத்தில் வில்லன் அந்தஸ்து பெற்றார்.
Photo Sharing and Video Hosting at Photobucket


1953-இல் ஜெமினி (தனது 33வது வயதில்!) கதாநாயகனாக நடித்த 'மனம் போல் மாங்கல்யம்' தான் அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது! இப்படத்தை என் பள்ளிப்பருவத்தில், லஸ் கார்னரில் உள்ள காமதேனு தியேட்டரில் ரசித்துப் பார்த்தது இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது! ஜெமினி இரு வேடங்களில் (இதில் ஒன்று பைத்தியக்காரனாக!) ஒரு கலக்கு கலக்கியிருப்பார்! அருமையான ஒரு நகைச்சுவை படம்!

தெலுங்கிலிருந்து கடன் வாங்கப்பட்ட கதைக்கரு (வெம்பட்டி சதாசிவபிரம்மம்), இரண்டு கதாநாயகிகள், பாலசரஸ்வதியும், சாவித்திரியும். இப்படத்தின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 1953-இல் ஒரு "காதல் மன்னன்" பிறந்தார்! வில்லன்களுடன் அடிக்கடி மல்லு கட்டாத, பக்கம் பக்கமாக வசனம் பேசாத ஒரு மாறுதலான நடிகர் நமக்குக் கிடைத்தார் என்றே சொல்ல வேண்டும். ஜெமினி பல திரைப்படங்களில் காதல் முக்கோணத்தில் சிக்கித் தவிப்பராக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிட வேண்டியது. நிஜ வாழ்விலும் அடிக்கடி காதல் வயப்பட்டதால், ஜெமினி நான்கு திருமணங்கள் செய்து கொண்டிருக்கிறார்!

நடிகர் கமலஹாசன் 'ஜெமினி மாமா' மீது மிகுந்த பிரியம் வைத்திருந்தவர். ஜெமினிக்கும் அதே போலத் தான். ஜெமினியின் 'களத்தூர் கண்ணம்மா' தான் கமலை திரை உலகுக்கு அறிமுகப்படுத்தியது. அது தவிர, 'உன்னால் முடியும் தம்பி' (ஜெமினி கமலின் தந்தையாக) மற்றும் அவ்வை சண்முகி (ஜெமினி கமலின் மாமனாராக) திரைப்படங்களில் இருவரும் போட்டி போட்டு நடித்து அசத்தியிருப்பார்கள்!

ஜெமினி கணேசன் நல்ல நடிகர் மட்டுமல்ல, நிறைந்த வாசிப்பனுபவமும், பேச்சுத்திறனும், விஷய ஞானமும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர். கிரிக்கெட், பில்லியர்ட்ஸ் விளையாட்டுக்களில் நல்ல தேர்ச்சி பெற்றவர், ஓரளவு நல்ல கர்னாடகப் பாடகரும் கூட! எல்லாவற்றுக்கும் மேலாக, அனைவரிடமும் தன்மையாக பழகக் கூடியவர், நல்ல பண்பாளர். காதல் மன்னன் மறைந்து விட்டாலும், அவரது திரைப்படங்கள் அவரை நம் நினைவிலிருந்து என்றும் அகல விடாமல் வைத்திருக்கத் தக்கவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

Star18. பிச்சை, திருட்டு பின் ஒரு நோபல் பரிசு!



உடற்கூறு ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்துக்கான 2007-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்ற மூவரில் ஒருவரான, 1937-இல் இத்தாலியில் பிறந்த மரியோ கெபெச்சி (Mario Capecchi) அமெரிக்காவின் உடா (UTAH) பல்கலைக்கழகத்துப் பேராசிரியர். மற்ற இருவர், மார்டின் ஈவான்ஸ், ஆலிவர் ஸ்மிதிஸ். பரிசுத் தொகை $1.54 மில்லியன். Embryonic ஸ்டெம் செல்களை பயன்படுத்துவதன் மூலம், வெள்ளெலிகளின் குறிப்பிட்ட மரபணுக்களில் மாற்றங்களை ஏற்படுத்த வல்ல கோட்பாடுகளை கண்டுபிடித்ததற்காக இம்மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
Photo Sharing and Video Hosting at Photobucket
மரியோ கெபெச்சி குறித்து சில சுவாரசியமான விஷயங்களை சொல்லி விட்டு, டெக்னிகல் சமாச்சாரத்துக்கு வருகிறேன்!
**************************
இரண்டாம் உலகப்போரின் போது, தனது நாலரை வயதில் தாயைப் பிரிந்த (அவரது தாய் கெஸ்டபோ போலீசாரால் கைது செய்யப்பட்டார்) மரியோ கெபெச்சி, அந்த சிறு வயதில் பிச்சை எடுத்திருக்கிறார், சாப்பாட்டுக்காக திருடியும் இருக்கிறார்! ஒரு சமயம் உடம்பு மோசமாகி, ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கெபெச்சி தப்பி ஓடாமல் இருப்பதற்காக, செவிலி ஒருத்தி கெபெச்சியை நிர்வாணமாக படுக்கையில் படுக்க வைத்திருக்க வேண்டியிருந்தது!

இரண்டாம் உலகப்போர் முடிந்து, கெப்பெச்சியின் தாய் சிறையிலிருந்து வெளிவந்து ஓராண்டு தனது மகனைத் தேடிக் கண்டுபிடித்தபோது, கெபெச்சிக்கு வயது ஒன்பது. தனது அன்னையுடன் (தனது உறவினருடன் சேர்ந்து வாழ) அமெரிக்காவுக்கு கப்பற் பிரயாணம் மேற்கொண்டார். முதன்முதலில் அமெரிக்கா சென்றபோது, அவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது! அமெரிக்க சென்ற பிறகு, கெபெச்சி பின்னோக்கிப் பார்க்கவில்லை!

ஒரு அரை மணி நேரத்தில் ஒரு மொழியின் அடிப்படையை புரிந்து கொள்ளும் வல்லமை பெற்ற அவரது தாயார் அமெரிக்காவில் 15 மொழிகள் பேசக் கற்றுக் கொண்டார்! புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?

1980-இல், தனது மரபணு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிக்கு பொருளுதவி கேட்டு இவர் கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மனம் தளராத கெபெச்சி, தன் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு மறுவடிவம் கொடுத்து, 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விண்ணப்பித்தார். இம்முறை விண்ணப்பம் ஏற்கப்பட்டு பொருளுதவி கிட்டியது.
*********************

நோபல் பரிசு பெற்ற தொழில் நுட்பம் 'மரபணு குறி வைத்தல்' (Gene Targeting) எனப்படுகிறது. இதன் மூலம், குறிப்பிட்ட மரபணுக்களை செயலிழக்க வைக்க முடிகிறது. ஒரு வெள்ளெலியின் குறிப்பிட்ட மரபணுக்களை செயலிழக்க வைப்பதன் (knock out) மூலம், அதன் DNA கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டு வந்து, ஒரு நோய்க்கு குறிப்பிட்ட மரபணுக்களின் பங்கை நிறுவுவதற்கு ஏதுவாகிறது. இவர்களின் ஆராய்ச்சியின் விளைவாக, 500-க்கும் மேற்பட்ட (ஒரு குறிப்பிட்ட நோய் அல்லது உபாதை தொடர்பான மரபணுக் கூறுகளை உடைய) உயிருள்ள வெள்ளெலி மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மனித மற்றும் வெள்ளெலியின் மரபணுக்களில் பெருமளவு ஒற்றுமை இருக்கின்றன. இந்த வெள்ளெலி மாடல்களின் குணாதிசயங்களை (characteristics) வைத்து, ஆராய்ச்சியாளர்கள் சேகரிக்கும் தகவல்கள், பலவகை மனித நோய்கள் மற்றும் தன்மைகளுக்கு (புற்று நோய், இதய நோய், நீரிழவு நோய், மூட்டு வலி, மூப்பு, உடல் பருமன், மனச்சிதைவு, போதைக்கு அடிமையாதல், நரம்புத் தளர்ச்சி நோய் போன்ற) எவ்விதம் மரபணுக்கள் காரணமாக அமையக்கூடும் என்பதை புரிந்து கொள்ளவும், அவை வராமல் தடுக்கவும், மிக உதவியாக இருக்கும். அது போலவே, சிசுவின் உடற்கூறு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளில் (abnormalities) மரபணுக்களின் பங்கை புரிந்து கொள்ளவும், இந்த 'ஜீன் டார்கெட்டிங்' உதவுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Star17. தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய பாஸ்டன் பாலாவின் பார்வை!

நான் முன் வைத்த ஒரு எளிய கேள்விக்கு பாஸ்டன் பாலாவின் சுவாரசியமான, விளக்கமான பதிலின் நீளத்தை முன் வைத்து அதை தனிப்பதிவாக இடுகிறேன். இந்த பதிலுக்காக தன் நேரத்தை ஒதுக்கிய அவருக்கு என் நன்றிகள்.

கேள்வி: தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட நான்காண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் ?

பதில்: முதலில் தனிமனிதனாக எனக்கு ஏற்பட்ட வளர்ச்சியை சொல்லி விடுகிறேன். பதிவுலகம் இல்லாவிட்டால் நான் இந்த பரிபக்குவத்தை அடைய இன்னும் பல நாள் ஆகியிருக்கும்.

1995- இல் 'ஆசை' படம் பார்த்தபோது இப்படியெல்லாம் வக்கிரம் பிடித்தவர்கள் இருக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த்துக்கு அதீத கற்பனை என்று புறந்தள்ளியிருந்தேன். ஆனால், ஒரு மாமாங்கம் கழித்து 'சத்தம் போடாதே'வில் மீண்டும் ஒரு சைக்கோவை பார்த்தபோது நம்ப முடிந்தது.

அடுத்து கொஞ்சம் பெரிய அளவில் யோசித்தால்...

தமிழில் வலைப்பதிவுகள் மட்டும் இல்லாவிட்டால், மனநிலை பிறழ்ந்தவர்களின் எண்ணிக்கை எகிறியிருக்கும்.

அலுவலில் 14/15 மணி நேர கசங்கல். கணினி முன் இருக்கும்வரை காபி. கணினி விட்டு எழுந்தவுடன் பொய் கும்மாளங்களுடன் கோப்பை நிறைய குடித்தல். உடலை மாசு படுத்தும் இந்த பானங்களை உட்கொள்ளுவதால் முப்பதிலேயே அறுபதைப் போன்ற கிழடு தட்டிய தோற்றம் மட்டுமல்ல. அகமும் வயதாகிப்போகிறது.

இதை மறைக்க இணையம் உதவுகிறது. 'அந்த நாள் ஞாபகம்' என்று ஆட்டோகிரா·ப் போட்டு பழைய நினைப்புகளை பகிர்ந்து அலைபாயும் சீற்றத்தை தணிக்க வைக்கிறது.

அயல்நாடுகளில் வேலைக்கோ படிப்பதற்கோ சென்றவர்களின் நிலை மேலும் பரிதாபம். மனைவியை விட்டு பிரிந்து இருக்கும் நிலை சிலருக்கு. சன் செய்திகள் தொட்டு காதலுக்கு மரியாதை போன்ற திரைப்படங்கள் வரை நிஜம் முதல் நிழல் வரை வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பொறுக்கி என்னும் சித்தரிப்பால், மணமுடிக்காத நிலை சிலருக்கு. உரையாட தோழமை இல்லை. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாத மேற்கத்திய நாகரிக தனிமைச் சிறை. அமெரிக்காவில் வேலை பார்ப்பவர்கள் விளையாட்டைத் தவிர எதை வேறு குறித்தும் பேச்சை வளர்க்க மாட்டார்கள். சினிமாவா... நோ; செய்திகள் - நோ...நோ; அரசியல் - மூச்!

இவர்களுக்கெல்லாம் வலைத்தமிழ்ப்பூக்கள் வடிகாலாக, அகழ்வாரைத் தாங்கும் நிலமாக, பொறுமைக்கு பேர் போன பூமாதேவியாக ரட்சித்து, மன அழுத்தத்தை நீர்க்க வைக்கிறது.

பெங்களூரு முதல் பாஸ்டன் வரை முந்தைய தலைமுறை போல் குடும்பத்தோடு ஒன்றி வாழாத நிலையில் சுருங்கி பதுங்குகுழி ஜீவனம். பேரக் குழந்தைகளுக்கு போர் அடித்தால் டிவியோ வெப்கின்ஸோ ஓடும். அடுக்களை வேலை முடிந்து களைத்த மனைவியோடு பேசுவதற்கு அந்தக்காலத்திலாவது நாலு நிமிஷம் கிடைத்தது. இன்றைய தொல்லைபேசி, செல்பேசி முதல் நள்ளிரவு அவுட்சோர்சிங் மின் அரட்டை காலத்தில், இல்லத்தரசியுடன் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால்தான் உரையாடல் உண்டு.

மனதுக்குள் புதைந்து அழுத்தும் சமாச்சாரங்களைக் கொட்டி, அதற்கு கனிவாக நாலு பதில் வார்த்தை பெற இணையத்தை விட்டால் இவர்களுக்கு புகலிடம் இல்லை. விவாகரத்து, மக்கட்செல்வம் திசைமாறுதல் போன்ற பனிகளில் சறுக்காமல், காரோட்ட, வாழ்க்கைச்சங்கிலியாக வலைப்பதிவை பாவித்து போலி வாழ்க்கை வாழ வழிவகுத்திருக்கிறது.

இந்தப் பார்வை சுயமறுப்பை (denial) உருவாக்கினாலும், கொஞ்சம் வெகுசன பத்திரிகைகளின் சிந்தனையை பிரதிபலித்தாலும், தமிழ்ப்பதிவுகள் மீது நான்கு வருடம் முன்பிருந்த நம்பிக்கை உடைந்ததன் நிதர்சனமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

எப்படி உடைகிறது?

சமீபத்தில் படித்த Influencer: The Power to Change Anything (பார்க்க: Book Selections by Boston Globe - 2007 « Snap Judgment) புத்தகத்தின் உதவியோடு சில குறிப்புகள்.

பிரச்சினகள் நம்மை எப்பொழுதும் சூழ்ந்திருக்கிறது. தனிமனித அளவில் குடும்பத்திற்கான வருவாய் ஆகட்டும்; உலக அளவில் இராக், ஈழம், வறுமை ஆகட்டும்; பணக்காரியாக இருந்தால் பூமி வெம்மை அடைவதாகட்டும்; ஏழையாக இருந்தால் எயிட்ஸ் நோய் முதல் பட்டினி வரை பலவும் இருக்கிறது.

இவற்றைப் பார்த்து புலம்பி 'எங்கே நிம்மதி? ஏது நீதி?' என்று சொல்லி ஓடி வருபவர்கள் மட்டும்தான் தமிழ்ப்பதிவுகளை நிறைத்திருக்கிறார்கள். பதிவர்களுக்கு பொறுமை இல்லை; தீர்வுகளை திடமாக முன்னெடுத்துச் செல்லும் திறமை இல்லை.

அந்த மாதிரி இல்லாமல் தனிக்கட்டையாக துடிப்புடன் திட்டத்தை வலியுறுத்தி பெருமளவில் நிறைவேற்றிய சிலரை உதாரணமாக்கலாம்:

1. The New Heroes . Meet the New Heroes . Mimi Silbert | PBS: குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை அனுபவிக்கும் பதினான்காயிரம் சிறைவாசிகளுக்கு மறுவாழ்வு காட்டும் பாதையை சுட்டி, சாதாரண மனிதர்களாக உலா வர வைத்திருக்கிறார். இதே போன்ற அமைப்பை கலிஃபோர்னியா மாகாணமும் செய்து பார்த்து வருகிறது. தாதாக்கள், கட்டப்பஞ்சாயத்து, கள்ளக்கடத்தல், விபச்சாரம், திருட்டு போன்ற பஞ்சமாபாதகங்களுக்கு திரும்ப சென்று விடுபவர்களின் சதவீதம் - அங்கே 70 %. இவரிடம் மாட்டிக் கொண்டவர்களில் பத்தே சதவிகிதம்தான் மீண்டும் பழைய குருடிக்கு செல்கிறார்கள்.

2. Rx for Survival . Global Health Champions . Donald R. Hopkins, MD, MPH | PBS: வறுமைக்கோட்டுக்கு கீழே பாதாளத்தில் வசிக்கும் ஏழைகளை பாதிக்கும் நோய் அது. தோலில் இருந்து பூச்சிகள் குபுக்கென்று வெளியேறும் கினியாப் புழு வியாதி. பாதிக்கப்பட்டவர்களை 99.7% அதிரடியாக குறைத்துள்ளார்.

3. The Purpose Prize | Meet Donald Berwick: விகடனில் ஜோக் படித்திருப்போம். பம்மல் கே சம்பந்தத்தில் பார்த்திருப்போம். உடலுக்குள் அறுவை சிகிச்சைக் கருவிகளை வைத்துவிடுவது முதல் பல்வேறு கவனச் சிதறல்கள். அமெரிக்காவில் நேற்றுதான் ஒப்புதல் போட்டிருக்கிறார்கள். 'மருத்துவர்களின் அஜாக்கிரதையால் குழந்தை மாறிக் கொடுத்தனுப்பி விட்டால் மகப்பேறுக்கான செலவு இலவசம். அறுவை சிகிச்சை தவறாக செய்தால் பணம் தர வேண்டாம்.' இந்த மாதிரி பெரிய மனசு அறிக்கை விடாமல், ஒண்ணேகால் லட்சம் உயிர்களை கடந்த பதினெட்டு மாதங்களில் காப்பாற்றியிருக்கிறார். அடுத்த குறிக்கோள்: ஐம்பது லட்சம் பேர்.

இந்த மாதிரி நாலைந்து பேர் தமிழ்மணத்தில் உலாவினால் போதும். ஒருவரின் தாக்கம் பலரை சென்றடையும்.

மேலும் ஒவ்வொரு சாதனைக்கும் பின்னணியில் அவரவர்கள் உறுதியாக நம்புகின்ற வழிகாட்டல்கள் இருந்திருக்கிறன. அதைப் பலரும் பின்பற்றி கடைபிடிக்கக் கூடியதாக மாற்றக்கூடிய திறன் இருந்திருக்கிறது.

இரண்டாவதாக எடுத்துக்காட்டிய டொனால்ட் ஹாப்கின்ஸை மீண்டும் உதாரண புருஷராக எடுத்துக் கொள்ளலாம்.

உலகத்தின் ஒவ்வொரு கிராமத்தின் நீர் ஆதாரத்திலும் கடைபிடிக்க மூன்று சீவாதாரமான பாவனைகளில் கவனம் செலுத்தினார்:

அ) எல்லோரும் தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
ஆ) யாருக்கு ஏற்கனவே கினியாப்புழு நோய் தாக்கப்பட்டிருக்கிறதோ, அவர் நீர்நிலைக்கு செல்லக்கூடாது.
இ) முதல் இரண்டை எவர் கடைபிடிக்கவில்லையோ, அவரை தைரியமாக மற்றவர்கள் தட்டிக்கேட்க வேண்டும்.

கடைசியாக் உந்துகை நிறைந்த மாந்தர்களை களப்பணியாளர்கள் ஆக்கி இருக்கிறார்.

தமிழ்மணத்துக்கும் வலைப்பதிவுகளுக்கும் கூட டோனால்ட் ஹாப்கின்ஸின் வழிமுறைகள் பொருந்தும்.

ஆசையுடன் சத்தம் மட்டும் போடும்
சைக்கோ பாலாஜி.
பாஸ்டன்.
***************************************

Thursday, December 06, 2007

Star16. CNN-IBN டிவியில் தமிழ் வலைப்பதிவுகள் பற்றி நான்

எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

அவற்றை வாசித்த பின்னரே இப்பதிவைத் தொடர வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தினாலும் நீங்கள் அதைக் கேட்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன ? சொல்றதை சொல்லி வைக்கலாம்னு தான் :))))
*****************************

ஒரு 3 மாதங்களுக்கு முன் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய ஒரு நிகழ்ச்சிக்காக CNN-IBN நிருபர் ரஜினி ராம்கியை அணுக அவர் என்னை கை காட்டி விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். பேட்டியை சீக்கிரம் எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து தொலைபேசியில் என்னை அழைத்து அவசரப்படுத்தி, அந்த நிருபர் ஒரு மாலை வீட்டுக்கே வந்து CNN-IBN ஆபீசுக்கு அழைத்துச் (இழுத்துச்) சென்று ஒரு 10-12 நிமிடங்கள் பேட்டி எடுத்துக் கொண்டார். தமிழ் வலைப்பதிவுகளின் தோற்றம், வளர்ச்சி, பயன் -- இவை தான் பேட்டியின் சாராமசம். தமிழில் வலை பதிதல் பற்றி ஆங்கிலத்தில் உரையாட வேண்டியிருந்தது சற்று முரணாகத் தோன்றினாலும், தமிழில் நான் வலை பதிய ஆரம்பித்த சூழல், தமிழ்மணம் சேவை, தமிழில் தட்டச்ச உதவும் மென்பொருட்கள், தமிழ் வலைப்பதிவர்களின் ஆதரவுடன் செய்து வரும் சமூகப்பணி என்று பல தகவல்களை அப்பேட்டியில் பகிர்ந்து கொண்டேன்.

பேட்டி ஒளிபரப்பப்படும் தேதியையும் நேரத்தையும், எனக்குத் தொலைபேசிச் சொல்வதாகக் கூறிய நிருபர் கடைசியில் கவுத்து விட்டார். செப் 15-ஆம் தேதி காலையிலும், மாலையிலும் இருமுறை ஒளிபரப்பான அந்த CNN-IBN நிகழ்ச்சியை நானே பார்க்க முடியாமல் போனது! (ஆனால், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப் போவதாக அறிவித்த CNN-IBN விளம்பரத்தில், தமிழ்மணத்தின் முகப்பு காட்டப்பட்டதை பார்க்கும் பாக்கியம் மட்டும் கிடைத்தது:)) ராம்கி தான் பார்த்ததாக அடுத்த நாள் ·போன் பண்ணிச் சொன்னார். அந்த CNN-IBN நிகழ்ச்சியின் ஒரு (மிகச்) சிறிய பகுதியை, IBNLIVE தளத்தில் உள்ள வீடியோவில் காணலாம். வீடியோவின் முதல் பாதி, இந்தியில் வலை பதிதல் பற்றி, அடுத்த பாதியில் (ஏதோ) கொஞ்சம் என்னைப் பார்க்கலாம் :)

நண்பர் சங்கரின் இந்தப் பதிவிலும் ஒரு சின்ன சைஸ் வீடியோவைப் பார்க்கலாம்!

CNN-IBN நிருபரிடம் அந்தப் பேட்டியை ஒரு குறுந்தகட்டில் இட்டு என்னிடம் தருமாறு கேட்டேன், இதுவரை தரவில்லை :(

என்றென்றும் அன்புடன்
பாலா

Star15. தமிழ் வலையுலகம் பற்றி ஒரு கேள்வி - பல பதில்கள்!

எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

அவற்றை வாசித்த பின்னரே இப்பதிவைத் தொடர வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தினாலும் நீங்கள் அதைக் கேட்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன ? சொல்றதை சொல்லி வைக்கலாம்னு தான் :))))
***********************************

எனக்குப் பரிச்சயம் உள்ள, நீண்ட நாள் வலை பதிந்து வரும் நண்பர்களுக்கு ஒரு கேள்வியை மடலில் அனுப்பி அவர்களின் கருத்தை கேட்டிருந்தேன். சிலர் கருத்து கூறினார்கள். சிலரிடமிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை (நேரமின்மையோ அல்லது, எதிர்மறையான கருத்துகளை சொல்ல வேண்டாம் என்ற எண்ணமோ, தெரியவில்லை!). சிலர் ரத்தினச் சுருக்கமாகவும், சிலர் கொஞ்சம் விளக்கமாகவும், பாஸ்டன் பாலா சற்று நீளமான, சுவாரசியமான பதிலாகவும் தங்கள் கருத்துகளாக பகிர்ந்து கொண்டதை தொகுத்து இப்பதிவில் தந்துள்ளேன்.

நான் கேட்ட கேள்வி இது தான்:

தமிழ்மணம் சேவை தொடங்கி கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், தமிழ் வலைப்பதிவுலகில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அல்லது குறிப்பிடத்தக்க விஷயமாக அல்லது வளர்ச்சியாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள் ? (வீழ்ச்சி பற்றி நேரடியாக கேட்காமல், பதில் தந்தவர்கள் தாமாகவே கூறினால் கூறட்டும் என்று விட்டு விட்டேன்:))


பதிவுலக நண்பர்களின் கருத்துகள் கீழே, வாசகர்களும் தாங்கள் தமிழ் வலைப்பதிவுலகின் (தமிழ்மணம் சார்ந்த அல்லது சாராத) வளர்ச்சியாக / வீழ்ச்சியாக கருதும் விஷயங்களை பின்னூட்டமாக இடலாம்.
******************************
எல்லா விஷயங்களிலும் தனக்கென ஒரு கருத்து வைத்திருக்கும் செல்வன் கூறியது கீழே:

இரண்டு வருடமாக டெக்னிகல் ரீதியில் பதிவுலகில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. பதிவர்களின் எழுத்து தரத்தில் பெரிதாக எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. சில ஸ்பெஷல் இன்ட்ரஸ்ட் குழுக்கள் தமது கொள்கைகளை பரப்ப இணையத்தை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றன.

செல்வன்
http://holyox.blogspot.com

******************************

வெகுஜன ஊடகங்களால் பூசி மெழுகப்படும் விஷயங்களை படிக்க முடிவதும், உடனுக்குடன் எழுப்பப்படும் (மட்டுறுத்தப்படாத) எதிர்வினைகளும் ஒரு பெரும் வளர்ச்சி தான்.

RR
******************************************

"வளர்ச்சியாக மட்டும்" தான் கருதுவது பற்றி ஜெயஸ்ரீ (http://mykitchenpitch.wordpress.com/):

பதிவர்கள்: வலைப்பதிவுகளின் எகிறியிருக்கும் எண்ணிக்கை மற்றும் எழுதுபவர்களுக்கு எந்தத் துறை அல்லது தளத்தில் எழுதினாலும் வாசகர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையும் தூண்டுதலும்....

வாசகர்கள்: தெரிந்த நண்பர்களின் பதிவை மட்டும், அவர்கள் என்ன எழுதியிருந்தாலும் :) படித்துக் கொண்டிருந்த வேளையில், என்ன எழுதியிருப்பார்கள் என்று தெரிந்துவைத்துக் கொண்டு படிக்கவும் விலக்கவும், புதிது புதிதாக வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தியதும், பிற ஊடகங்களில் கிடைக்காத புதிது புதிதான தளங்களை, விபரங்களை, வன்மையான எழுத்தை, வாதங்களை, விமர்சனங்களை என்னைப் போல் வாழைப்பழச் சோம்பேறி மற்றும் நேர நெருக்கடியில் இருப்பவர்களும், விரல் சொடுக்கலில் வாசிக்க வசதிசெய்து தந்ததும்...

*************************************************
வலைப்பதிவுலகில் எனக்கு ஆரம்பத்தில் அறிமுகமான நண்பர்களில் (சிலரில்) ஒருவரான "பிருந்தாவனம்" கோபி கூறியது:

பதிவர் பட்டறைகளும் அவற்றை தொடர்ந்து புதிதாய் பதிய வந்த பதிவர்களையும் தான் நான் தமிழ் வலைப்பதிவுலகின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக கருதுகிறேன். நுட்ப ரீதியாக நிழற்படம் ஒலி/ஒளித்துண்டு கொண்ட வலைப்பதிவுகள், (பங்குசந்தை முதலான) துறைசார்ந்த வலைப்பதிவுகள் அதிகரித்திருப்பதும் முக்கியமான வளர்ச்சியாக கருதலாம்.

ப்ரியமுடன்,

கோபி
http://higopi.blogspot.com

*****************************************
நண்பர் ஹரிஹரனின் கருத்து:

எனது ஒன்றரை ஆண்டு வலைப்பூ அனுபவத்தில் தமிழ் மண சேவையில் (திரட்டியில்) பிராமணர்களை வசைபாடும், இந்திய தேசியத்தை எதிர்க்கும், ஈழப்புலிகள், கம்யூனிச ஆதரவுக்குரல்களை பிரதிபலிக்கும் பதிவுகள் பிரதானமாக இடம் பெறுவதை காண முடிந்தது.

அன்புடன்
ஹரிஹரன்
http://harimakesh.blogspot.com/

**********************************************
ஐகாரஸ் பிரகாஷ் content generation-ஐ முக்கிய வளர்ச்சியாக கருதுகிறார்! அதாவது,

வலைப்பதிவுகள் மூலமாக உருவாக்கப்பட்ட, உருவாக்கப்படும் லட்சக்கணக்கிலான தமிழ் இணையப்பக்கங்கள். வலைப்பதிவுகள் இல்லாவிட்டால், இவ்வளவு குறைந்த காலகட்டத்தில்இதற்கு சாத்தியமே இல்லை

-பிரகாஷ்

*******************************************
இன்று வலைப்பதிவுகளின் எண்ணிக்கை பெருகியதற்கு முக்கியக் காரணியாய் நான் கருதும் தமிழ்மணச் சேவையைத் தொடங்கியவரும், சக-GCTian-ம் ஆன காசி, 6 பாயிண்டுகளை சொல்லி விட்டு, 'அவ்வளவு தான்' என்கிறார் :)

1. வலைப்பதிவர்களுக்குக் குறைந்த பட்ச கவனம் கிடைக்கச் செய்திருப்பதால் பலரும் வலைப்பதியத் தூண்டுகோலாய் இருக்கிறது.
2. வலை உலாவர்களிடையே வலைப்பதிவுகள் குறித்து அறிய வைக்கிறது.
3. வைய விரிவு வலையில் தமிழ்ப்பக்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.
4. பொதுப்புத்தியோடு ஒட்ட ஒழுகாத பதிவுகளுக்கும் வாசக வட்டம் கிடைக்கச் செய்கிறது.
5. மீடியா மாபியாவுக்குக் கட்டுப்படாத ஒரு மேடையைத் தமிழ் வாசகர்களுக்கு அளிக்கிறது.
6. தமிழ் யுனிகோடு பரவலாக்கத்தை விரைவுபடுத்துகிறது.

அன்புடன்,
-காசி
*************************************************
சென்ற வருடம், சிறந்த தமிழ் வலைப்பதிவுக்காக Indibloggies விருது பெற்ற அருமை நண்பர் பெனாத்தலாரின் short & sweet கருத்து :)

குறிப்பிடத்தக்க வளர்ச்சி என்று எதுவும் உடனே தோன்றவில்லை. பலபேர் பதிய வந்ததும், மாற்று ஊடகமாக வலைப்பதிவுகள் - குறைந்தபட்சம் பதிபவர்களால் - கருதப்படுவதைச் சொல்லலாம். பலரின் (நான் உள்பட) எழுத்தாசையைத் தணித்ததைச் சொல்லலாம். அச்சு ஊடகங்களாலும் கவனிக்கப்படுவதைச் சொல்லலாம். ஆனால் எதுவும் முழுமையாக இல்லை என்பதே உண்மை.

வீழ்ச்சி என நிறையவே சொல்லலாம் :-(((((((

பெனாத்தல் சுரேஷ்
http://penathal.blogspot.com


(ஆனால் வீழ்ச்சி என்று தான் கருதுவதை சுரேஷ் பகிர்ந்து கொள்ளாததில் அரசியல் எதுவும் இல்லை என்று நான் நம்புகிறேன்;-))

**********************************************
தன்னை பிரபலமாக்கியதில் தமிழ்மணத்திற்கு பெரும் பங்குண்டு என்பதை 'பெருந்தன்மையோடு' டோண்டு சார் ஒப்புக் கொண்டுள்ளார் ;-)

ஒரேயடியாகத் தேங்கிப் போகாமல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு இன்னமும் தமிழ் பதிவர் உலகின் மிக முக்கியமான அங்கமாகச் செயல்படுவதையே தமிழ் மணத்தின் மிக முக்கிய சிறப்பாகக் கருதுகிறேன்.

என் பதிவுக்கு பல இடங்களிலிருந்து விசிட்டர்கள் வந்தாலும் தமிழ் மணத்திலிருந்து வருபவர்களது எண்ணிக்கை மிக அதிக அளவில் உயர்ந்த இடத்தில் உள்ளது. அதற்கு பின்னால் இரண்டாவதாக வருவது ரொம்ப தூரத்தில் உள்ள இரண்டாவது இடத்தில்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
http://dondu.blogspot.com

***********************************************
நண்பர் ஆசாதின் கருத்து:

1. கட்டற்ற சுதந்திரத்துடன் முன்வைக்கப்படும் கருத்துகள் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைவது.

2. பதிவர் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பும் பட்சத்தில்,
யாரையும் சந்திக்காமலே தனது எழுத்துகளின் மூலமாக தனது ஆளுமையை மேற்சொன்ன குறிப்பிட்ட வாசகர்களுக்கு உணர்த்துவது.

அன்புடன்
ஆசாத் (அபுல் கலாம்)
****************************
வலை பதிவதிலிருந்து ஒரு தற்காலிக பிரேக் எடுத்துக்கொண்டிருக்கும் ரோசா வசந்த், தனது கருத்தை அனுப்பியிருந்தார்:

உங்களின் குறிப்பிட்ட கேள்விக்கு குறிப்பிட்ட ஒரு பதிலை என்னால் தர முடியவில்லை. ஏற்கனவே எனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டபடி,
தினமும் நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் வருவதும், ஒரு ஆயிரம் பேர்கள் தங்களுக்கு என்ற தனித்தன்மையுடன் கருத்து தெரிவிப்பதும், என்னவிஷயம் எழுதினாலும் அது விவகாரமாகி அது குறித்து பல வகையான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு தினமும் ஒரு விவாதம்
நடப்பதுவும் எல்லாமே நல்ல விஷயமாக குறிப்பிடத் தகுந்ததாகவே எனக்கு தெரிகிறது.

ஆனால் இவை எல்லாம் (எனது பார்வையில்) ஆரோக்கியமான முறையில் நடக்கிறதா என்று கேட்டால் எதிர்மறையாகத் தான் பதில் சொல்ல வேண்டும். ஆனால் இதுவும் முன் இருந்த நிலையை விட முன்னேறிய வளர்ச்சியாகத் தான் என்னால் பார்க்க முடிகிறது. வேறு ஒரு இடத்தில் சொன்னது போல், ஒரு அழுகிய சூழலிலிருந்து ஆரோக்கியமற்ற ஒரு சூழலுக்கு வந்திருப்பதாக எனக்கு தோன்றுகிறது.

அன்புள்ள

வசந்த்.
***********************************
டீச்சர் எப்போதும் போல பாலிஷாக பதில் கொடுத்துள்ளார் :)

வெகுஜன ஊடகங்களுக்கு மாற்றாகத்தான் இப்போது பல
வலைப்பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. மதம், மனிதம், இலக்கியம், நாட்டு நடப்பு என்று பலவிதமான விஷயங்களில் உலகின் பல்வேறு பாகங்களில் இருக்கும் நண்பர்களுடன் ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நடப்பதும், அவைகளைப் படிப்பதும் மனதுக்கு நிறைவாகவே இருக்கின்றது.

நட்பு வட்டமும் பெருகி வருகின்றது, நல்லது தானே?

என்றும் அன்புடன்,
துளசி
**********************
நிறைந்த வாசிப்பனுபவம் உள்ள Ravi Srinivas கூறுவது:

In my view the sheer no. of tamil bloggers is an important development and தமிழ்மணம் has played an important role in this. But in terms of content tamil blogging has a long way to go.
This is my humble opinion.
thanks for remembering me and for asking.

cheers
ravi srinivas
http://ravisrinivas.blogspot.com
***************************
எழுத்தாளர் மேடம் கருத்து:

பலர் மிக சுவாரசியமாகவும், நல்ல விஷய ஞானம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். இவ்வருடத்திய
புதுமுகம் என்ற கண்ணோட்டத்தில் ஜமாலன், நந்தா, வவ்வால், ஆடுமாடு, ரத்னேஷ் (ஞாபகத்தில்
எழுதுகிறேன்) நன்றாக எழுதுகிறார்கள். (ஜமாலன் மற்றும் ரத்னேஷ் அச்சு பத்திரிக்கைகளில் எழுதிக்
கொண்டிருந்தவர்கள் என்று நினைக்கிறேன்). சிறப்பு அம்சமாய் நினைப்பது, புகைப்படம் எடுக்க சொல்லிக்
கொடுக்கும் கூட்டு வலைப்பதிவு.

தமிழில் இது புது முயற்சி. சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பதும், பலரும் போட்டிகளில்
ஆர்வத்துடன் பங்கெடுப்பது அக்கூட்டு வலைப்பதிவின் வெற்றியைக் காட்டுகிறது.

--- ராமச்சந்திரன் உஷா
http://nunippul.blogspot.com
**********************************
தமிழிலும் ஆங்கிலத்திலும் நீண்ட நாளாக வலை பதிபவரும், பிரபல பத்திரிகையாளரும் ஆன Aruna Srinivasan அவர்களின் கருத்து:

ஆரம்பித்த நிலையிலிருந்து பார்த்தால் தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கக கணிசமாக அதிகரித்துள்ளது ஒரு நல்ல விஷயம். பெருமளவில் இல்லாவிட்டாலும்,பதிவுகள் ஓரளவு மாற்று ஊடகத் தன்மையை பெற்றுக்கொண்டிருக்கின்றன என்றே தோன்றுகிறது. எழுத்து என்றால் ஏதோ எட்டாத கொம்பு என்ற பயம் /தயக்கம் இருக்கும் பலரும் இன்று ஆர்வமாக தயக்கம் இன்றி எழுத முன் வந்துள்ளது ஒரு பெரிய தாக்கம். எழுத்து செறிவுக்கு - பலவித எண்ணங்களுக்கு - பகிர்தலுக்கு நிச்சயம் வலைப்பதிவுகள் ஒரு பாதை வகுத்துள்ளன. ஆனால் எதிர்பார்த்த விதத்தில் இன்னும் பன்முனை பொருள் / அடக்கம் மிகுந்த பதிவுகள் அதிகரிக்கவில்லை.

என் கருத்தை அறிய முற்பட்டதற்கு மிக்க நன்றி.

அன்புடன்

அருணா

********************************
பி.கு: பாஸ்டான் பாலாவின் பதிலை (நீளம் காரணமாக) தனிப்பதிவாக இட உத்தேசித்துள்ளேன்.

எ. அ. பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails